காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்கும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை


காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்கும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2018 12:00 AM GMT (Updated: 17 Feb 2018 9:43 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் மத்திய அரசு அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது

கேள்வி:- காவிரி நதி நீர் பிரச்சினையில் மேல் முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதே?

பதில்:- ஏற்கனவே எங்களது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளோம். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது சட்ட போராட்டம் மூலமாக தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து அந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

இந்த தீர்ப்பில் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கது. சில விஷயங்கள் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் நீதிமன்றம் 192 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து இருந்தது. தற்போது வந்துள்ள தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம்

அதேவேளையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு 6 வாரத்துக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. அதன்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதேபோல் நதிகள் எந்த மாநிலத்திற்கும் சொந்தம் அல்ல. அது தேசிய சொத்து என தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. நமது பாசனபரப்பு 24 ஆயிரத்து 708 லட்சம் ஏக்கர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான் நடுவர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசு இதழில் வெளியிட வேண்டும் என சட்டபோராட்டம் வழியாக கெஜட்டில் வெளியிட செய்தார்.

இப்போதும் அவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் இருந்து நீரின் அளவு குறைத்து வழங்கப்பட்டு இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

மறுபரிசீலனை மனு

கேள்வி:- காவிரி தீர்ப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறியுள்ளார்களே?

பதில்:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 15 ஆண்டுகளுக்கு செல்லும். மேல்முறையீடு செய்ய இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- தமிழக அரசு மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே?

பதில்:- பல்வேறு கட்சி தலைவர்களும் இதனை குறிப்பிட்டுள்ளார்கள். தீர்ப்பை முழுமையாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து அதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை

கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு சார்பில் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவீர்களா?

பதில்: பல ஆண்டுகளாக நாம் எதிர்பார்த்து இருந்த காவிரி மேலாண்மை வாரியம், நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை. அதை சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பில் 6 வாரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்.

கேள்வி:- இந்த தீர்ப்பால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு என்ன நம்பிக்கை கொடுக்கிறீர்கள்?

பதில்:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை விமர்சனம் செய்ய இயலாது. அந்த தீர்ப்பை சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story