70-வது பிறந்தநாள்: அ.தி.மு.க. அலுவலகத்தில் 24-ந் தேதி ஜெயலலிதா சிலை திறப்பு


70-வது பிறந்தநாள்: அ.தி.மு.க. அலுவலகத்தில் 24-ந் தேதி ஜெயலலிதா சிலை திறப்பு
x
தினத்தந்தி 21 Feb 2018 10:45 PM GMT (Updated: 21 Feb 2018 7:26 PM GMT)

ஜெயலலிதாவின் பிறந்தநாளான வருகிற 24-ந் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவருடைய உருவச்சிலை திறக்கப்பட உள்ளது. #Jayalalithaa

சென்னை,

ஜெயலலிதாவின் பிறந்தநாளான வருகிற 24-ந் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவருடைய உருவச்சிலை திறக்கப்பட உள்ளது. நமது அம்மா நாளிதழும் அறிமுகம் செய்யப்படுகிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் 24-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அவருடைய பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகே, அவருடைய முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா தொடங்கிய ‘நமது எம்.ஜி.ஆர். நாளிதழ்’ டி.டி.வி.தினகரன் அணியினர் கட்டுப்பாட்டில் இருந்து வருவதால், அ.தி.மு.க.வுக்கு என்று ‘நமது அம்மா’ என்ற பெயரில் நாளிதழ் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அந்த நாளிதழும் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.திமு.க. நிரந்த பொது செயலாளராகவும், தமிழக முதல்-அமைச்சராகவும் அரும்பணியாற்றிய ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு கட்சி அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆருடைய உருவச்சிலை அருகே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவருடைய (ஜெயலலிதா) முழு உருவ வெண்கலசிலையை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர்.

அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளேடு, ‘நமது அம்மா’ பத்திரிகையை அறிமுகம் செய்து, தொடங்கி வைக்க உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story