வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவு பெயர்களை நீக்க உத்தரவு


வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவு பெயர்களை நீக்க உத்தரவு
x
தினத்தந்தி 26 Feb 2018 10:00 PM GMT (Updated: 26 Feb 2018 8:52 PM GMT)

தமிழக வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவு பெயர்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

சென்னை, 

இந்திய தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சென்னை மெட்ரோ வாட்டர் மேலாண்மை இயக்குனர் சத்தியபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் லக்கானிக்கான இடமாற்றம் குறித்த உத்தரவை தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. இந்த அரசாணை விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகள், தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதுவரை நடந்த சிறப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைன் பதிவின்படி 1.80 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இரட்டைப்பதிவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதுபற்றி நேரில் சென்று ஆய்வு நடத்தி இரட்டைப் பதிவுகளை நீக்கும்படி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் எந்திரங்களை இனிவரும் அனைத்து பொதுத்தேர்தல்களில் நாடு முழுவதும் பயன்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான நடைமுறைகளை முழுமையாக கண்காணிக்கும் சாப்ட்வேர் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த எந்திரங்கள் கண்காணிக்கப்படும்.

கமல்ஹாசன் தொடங்கிய ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும், பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு குறிப்பிட்ட ஒரே சின்னத்தை தற்காலிகமாக ஒதுக்க வாய்ப்புள்ளது. ஆனால் தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற்றால்தான் அந்த கட்சி அங்கீகாரம் பெறும்.

பல வாக்குச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே இதைத் தவிர்க்கும் வகையில், தமிழகத்தில் ஆயிரத்து 400 பேருக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிய இருக்கிறோம். ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரத்து 200 பேர் என்ற அளவில் அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பின்னர் நாடு முழுவதும் பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story