மதுரை ஆதீனமாக அறிவிப்பு: நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கில் மார்ச் 5-ந்தேதி தீர்ப்பு


மதுரை ஆதீனமாக அறிவிப்பு: நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கில் மார்ச் 5-ந்தேதி தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Feb 2018 9:45 PM GMT (Updated: 27 Feb 2018 9:10 PM GMT)

மதுரை ஆதீனமாக நித்யானந்தா அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை மார்ச் 5-ந்தேதி பிறப்பிப்பதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

மதுரை ஆதீனத்தின், 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னைத்தானே அறிவித்துக்கொண்டதை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், மதுரை ஆதீனத்துக்குள் செல்ல நித்யானந்தாவுக்கு இடைக் கால தடை விதித்தார். பின்னர், நீதிபதி ஆர்.மகாதேவன், ஐகோர்ட்டு மதுரை கிளையில் இருந்து, சென்னை ஐகோர்ட்டுக்கு வந்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டில் வைத்து விசாரித்து வருகிறார்.

ஏற்கனவே, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த நித்யானந்தா, தன்னை 293-வது ஆதீனமாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்ததால், ஆதீனம் என்று குறிப்பிட்டதை திரும்பப் பெற்றுக் கொண்டு, நிபந்தனையற்ற மன்னிப்பையும் நித்யானந்தா கோரினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்க நித்யானந்தா முயற்சிப்பதாக மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, ‘நித்யானந்தா ஆதீன மடத்துக்கு தானாக வரவில்லை. அவரை நியமித்ததே தற்போதைய ஆதீனம் தான்’ என்றார். மதுரை ஆதீனம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘நித்யானந்தாவை முதலில் நியமித்தாலும், பின்னர் அந்த நியமனத்தை ஆதீனம் ரத்து செய்து விட்டார்’ என்று கூறினார்.

நித்யானந்தா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரகுநாதன், ‘இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு உரிமை இல்லை. நித்யானந்தா நியமனத்தினால், இவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வேண்டுமென்றால் மனுதாரர் பொதுநல வழக்கை தொடர்ந்து கொள்ளட்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட இந்து சமய அறநிலையத்துறை வக்கீல் எம்.மகாராஜா, ‘இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது. பாதிக்கப்பட்டவர் தான் வழக்கை தொடர வேண்டும் என்று கூற முடியாது. யார் வேண்டுமென்றாலும் வழக்கை தொடரலாம். இந்த வழக்கில் இந்த ஐகோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதை இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தும்’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி, ‘மதுரை ஆதீனத்தை தொடங்கிய ஞானசம்பந்தர், யாரெல்லாம் சைவ மதத்தை பின்பற்றுகிறார்களோ, யாரெல்லாம் சைவ மதக்கொள்கையை பின்பற்றுகிறார்களோ, அவர்கள் இந்த மடத்தை சேர்ந்தவர்கள் தான் என்று கூறியுள்ளார்’ என்றார்.

இதை தொடர்ந்து அனைத்து தரப்பு வக்கீல்கள் வாதம் செய்தனர். வக்கீல்களின் வாதம் நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற மார்ச் 5-ந் தேதி பிறப்பிக்கப்படும் என்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அதற்கு முன்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை கொண்ட மனுவை அனைத்து தரப்பினரும் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி கூறினார். 

Next Story