ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நீக்கத்திற்கு எதிர்ப்பு, 147 பேர் ராஜினாமா செய்ய முடிவு


ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் நீக்கத்திற்கு எதிர்ப்பு, 147 பேர் ராஜினாமா செய்ய முடிவு
x
தினத்தந்தி 23 March 2018 12:06 PM GMT (Updated: 23 March 2018 12:06 PM GMT)

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147 பேரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளனர். #RajiniMakkalMahalirMandram


சென்னை,


ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமனம் செய்வதில் செயலாளர் ராஜு மகாலிங்கமும், நிர்வாகி வி.எம்.சுதாகரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 27–ந்தேதி சென்னையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 15–ந்தேதி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமன பட்டியல் வெளியானது. அதில் மாவட்ட பொறுப்பாளராக அரவிந்தும், செயலாளராக தம்புராஜூம் என நிர்வாகிகளின் பெயர் இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில் பட்டியல் வெளியான 7 நாட்களிலேயே மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–  திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ் ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும், ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் முரணாக செயல்பட்டு கொண்டிருப்பதினால் அவரை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக தகுதிநீக்கம் செய்து அவருடைய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் நன்கு கண்காணித்து அவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் அவருடைய பதவி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். 

அவருடன், மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஆர். அரவிந்த், மாவட்ட செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜினாமாவிற்கு முடிவு

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளான மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள் என 147 பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 147 பேர் தங்களுடைய பொறுப்பை ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளனர். இதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை ரஜினியிடம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story