வெளிநாடு சிகிச்சைக்கு செல்ல ஜெயலலிதா விரும்ப வில்லை ; இட்லி சாப்பிட்டது உண்மைதான் கிருஷ்ணபிரியா சாட்சிய விவரம்


வெளிநாடு சிகிச்சைக்கு செல்ல ஜெயலலிதா விரும்ப வில்லை ; இட்லி சாப்பிட்டது உண்மைதான்  கிருஷ்ணபிரியா சாட்சிய விவரம்
x
தினத்தந்தி 24 March 2018 11:30 AM GMT (Updated: 24 March 2018 11:30 AM GMT)

தன்னை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்வதை ஜெயலலிதா விரும்பவில்லை, இட்லி சாப்பிட்டது உண்மைதான் கிருஷ்ணபிரியா முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரனை ஆணையத்தில் கூறி உள்ளார்.

சென்னை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், வீட்டுப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில் சசிகலாவின் சகோதரர் மனைவி இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து இருந்தது. இந்த ஆணையத்தின் முன் கடந்த ஜனவரி 2-ம் தேதி ஆஜராகி கிருஷ்ணபிரியா வாக்குமூலம் அளித்தார்.

போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் இளவரசிக்கு மகளாகப் பிறந்த கிருஷ்ணபிரியாவுக்கு கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. அதுவரை ஜெயலலிதாவுடன் வசித்தவர். இதன்காரணமாக கிருஷ்ணபிரியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆணையத்திடம் கிருஷ்ணபிரியா அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் விவரம் வருமறு:-

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மறுநாள் அதாவது 23-ம்தேதி காலையில் ஜெயலலிதாவுக்கு நினைவு வந்துவிட்டது. அப்போது, நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள விரும்பினார் என்று என் தாய் இளவரசி என்னிடம் தெரிவித்தார் என கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டவுடன், அவரை சிறந்த சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்ல என் அத்தை சசிகலா விரும்பினார். இதற்காக ஜெயலலிதாவிடம் பேசினார். ஆனால், தன்னை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்வதை ஜெயலலிதா விரும்பவில்லை, அதற்கு மறுத்துவிட்டார்

ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சுயநினைவு இல்லாமல் இருந்ததால்தான் எங்களால் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வர முடிந்தது. ஒருவேளை நினைவுடன் இருந்திருந்தால், மருத்துவமனைக்கு செல்லக்கூட அவர் அனுமதித்து இருக்கமாட்டார்.

அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, சசிகலாவைத் தவிர வேறுயாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. என்னுடைய தாயார் இளவரசியும், அத்தை சசிகலாவும் ஒன்றாக 3-வது தளத்தில் தங்கி இருந்தார்கள். ஜெயலலிதா அழைக்கும் போது சசிகலா மட்டுமே தனியாகப் போவார். வேறுயாரையும் அழைத்துச் செல்லமாட்டார்.

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையின்போது உடல்நலம் தேறியபோது, இட்லி சாப்பிட்டார். உடல்நலம் தேறிவந்தபோது, இட்லி, பொங்கல், தக்காளி சாதம் ஆகியவற்றை சிறிய அளவு சாப்பிட்டார், ஐஸ்கிரீம் கூட சிறிதளவு சாப்பிட்டார்.

ஜெயலலிதாவுக்கு பழங்கள் மிகவும் பிடிக்கும். சிகிச்சையின் போது ஒருமுறை திராட்சை சாப்பிடுகையில் அவருக்கு இருமல் வந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முதல்நாள், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் ஜெயலிலதாவின் உடல்நிலையை பரிசோதித்துவிட்டு, அவரின் மூளை செயல்பாட்டில் இருக்கிறது, ஆனால், எம்கோ கருவி பொருத்தியபோதிலும், அவரின் இதயம் மீண்டும் இயக்கம் பெற முடியவில்லை எனத் தெரிவித்தனர்.

மருத்துவத்தில் எப்போது வேண்டுமானாலும் அதியசங்கள் நிகழலாம். ஆதலால், ஜெயலலிதா தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகளோடு சிகிச்சையில் இருக்கட்டும், வழக்கம்போல் சிகிச்சை அளியுங்கள். அதை எடுக்க வேண்டாம் என்று சசிகலா மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் சிகிச்சை கருவிகள் அகற்றப்பட்டபோது, அவரின் மூளை செயல்பாட்டில் இருந்ததா என்பது குறித்து தனக்கு தெரியாது எனத் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.

அதேசமயம், டிசம்பர் 5-ம் தேதிமாலை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த எம்கோ கருவி அகற்றப்பட்டதும் வீட்டில் இருந்து அவரின் சேலை ஒன்று கொண்டுவரப்பட்டது. அந்த சேலையை ஜெயலலிதா உடலில் சுற்றி அவரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றோம். வீட்டின் வரவேற்பறையில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு, புரோகிதர் ஒருவரின் உதவியோடு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த பூஜைகளின் போது 7 பெண்கள் உடன் இருந்தோம் என கிருஷ்ணபிரியா கூறியுள்ளார்.

Next Story