போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி சென்னையில் 14 இடங்களில் நடந்தது


போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி சென்னையில் 14 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 24 March 2018 10:29 PM GMT (Updated: 24 March 2018 10:29 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை,

தமிழக போலீஸ்துறையில் காலிப்பணி இடங்கள் அதிகம் இருப்பதால், போலீசார் கூடுதல் பணிச்சுமைக்கு உள்ளாகின்றனர். இரவு-பகல் பாராமல் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சில போலீசார் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர்.

அதன்படி சென்னையில் ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் அருண்ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அயனாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சதிஷ்குமார் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்-புக்’ போன்ற சமூக வலைத்தளங்களிலும் போலீசார் தங்களது மனக்குமுறலை வெளிப் படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை நகரில் பணியாற்றும் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நேற்று யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், மகளிர் கல்லூரி, ராயபுரம் புனித பீட்டர் பள்ளி, புழல் மைதானம், திரு.வி.க.நகர் மாநகராட்சி மைதானம், கந்தசாமி நாயுடு கல்லூரி, அம்பத்தூர் எய்மா கட்டிடம், மயிலாப்பூர் காமதேனு கல்யாண மண்டபம், வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானம், அடையாறு புனித மைக்கேல் மைதானம், மீனாட்சி கல்லூரி, புனித தோமையார் மலை ஆயுதப்படை மைதானம், தலைமை செயலகம் எதிரே உள்ள மைதானம், கீழ்ப்பாக்கம் புனித ஜார்ஜ் பள்ளி ஆகிய 14 இடங்களில் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த யோகா பயிற்சி வகுப்பை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். யோகா பயிற்சியில் கூடுதல் கமிஷனர்கள் எச்.எம்.ஜெயராம், எம்.சி.சாரங்கன், இணை கமிஷனர்கள் டி.எஸ்.அன்பு, நஜ்மல் ஹோடா, ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர்கள் ஏ.ஜெயலட்சுமி, எஸ்.விமலா, கே.சவுந்தரராஜன் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

திரு.வி.க.நகர் மாநகராட்சி மைதானத்தில், துணை கமிஷனர் ஷியமளா தலைமையில் போலீசார் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பிரபல யோகா பயிற்சி நிபுணர் இங்கர்சால் பயிற்சி அளித்தார்.

வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் உள்பட போலீசார் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். யோகா பயிற்சி வகுப்பில் சூரிய நமஸ்காரம், மூச்சு பயிற்சி, தியானம் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

யோகா பயிற்சி வகுப்பு குறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீசாருக்கு மன உளைச்சலை குறைக்கவும், போக்கவும் தேவையான பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது என அவர் கூறினார்.

Next Story