தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி கலையும் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு


தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி கலையும் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 25 March 2018 11:15 PM GMT (Updated: 25 March 2018 9:17 PM GMT)

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என்று ஈரோடு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு,

ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டை நிறைவு செய்து நேற்று இரவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா அரசு திட்டமிட்டு இந்தியை திணிக்கிறது. சமஸ்கிருதத்தை புகட்டுகிறது. ஆனால் பெரியார், அண்ணா, கலைஞரின் வாரிசுகள் நாம் இருக்கும் வரை தமிழகத்தில் அவர்கள் கால் பதிக்க முடியாது என்பதை உணர்த்தும் மாநாடாக இது அமைந்திருக்கிறது.

லட்சோப லட்சம் தொண்டர்களில் ஒருவனாக, உங்களில் ஒருவனாகவே நான் இருப்பேன். உங்களில் ஒருவன், உங்களால் ஒருவன், உங்களுக்காக ஒருவன். இன்று தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கும்பல் சூழ்ச்சி, சூது செய்கிறது.

மிருகபலத்துடன் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா திராவிட இயக்கங்களை அழிக்க சதி செய்கிறது. ஊடகங்களில் உட்கார்ந்து கொண்டு ஏளனம் செய்கிறார்கள். ஏகடியம் செய்கிறார்கள். தி.மு.க. என்ன செய்தது என்று கேட்கிறார்கள். இந்த தைரியம், ஆணவம், துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது?.

சில மாநிலங்களில் பண பலம், பிரித்தாளும் சூழ்ச்சி, அதிகார பலத்தால் தங்கள் ஆட்சியை கொண்டு வர பார்க்கிறார்கள். இங்கும் குதிரைபேர ஆட்சி அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு கைகட்டி வாய்ப்பொத்தி சேவை செய்கிறது.

மனித உரிமை பறிப்பு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத போதிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது என்று பல்வேறு நிலைகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 6 வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு வருகிற 29-ந் தேதியுடன் முடிகிறது. அதற்குள் வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையாக மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிவிக்கிறேன். டெல்லி சென்றும் போராட்டம் நடத்துவோம்.

தமிழக அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. அறிவியல்படி வெற்றிடம் உடனடியாக நிரப்பப்பட்டு விடும். எனவே வெற்றிடம் எதுவும் இல்லை. தி.மு.க.வில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சி இன்னும் ஒருவாரத்தில் இருக்காது. இந்த ஆட்சியை கலைத்து நாம் ஆட்சியை பிடிக்கப்போவது இல்லை. சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கலைக்க முடியும். ரூ.3 கோடி தருகிறேன் என்றால் வரப்போகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஆட்சியை பிடித்தால் மக்களைப்பற்றி சிந்திக்க முடியுமா? எனவே நாம் ஆட்சியை கலைக்க மாட்டோம்.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும். தீர்ப்பு வந்தால் ஆட்சி கலையும். 6 மாதம் கவர்னர் ஆட்சி. அடுத்து பொதுத்தேர்தல். யாருடைய தயவும் இன்றி முழு பலத்துடன் ஆட்சியில் அமர்வோம். அதற்கு பின்னர் 30 ஆண்டுகள் யாரும் நம்மை அசைக்க முடியாது. இவ்வாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மாநாட்டு நிதியாக ரூ.5 கோடியே 10 லட்சத்தை மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சு.முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

தி.மு.க. மாநாட்டில் முதன்மை செயலாளர் துரைமுருகன் நேற்று பேசும்போது, மு.க.ஸ்டாலின் ராஜபாட்டை வழியாக வந்து முதல்-அமைச்சர் பதவியில் அமர்வார் என்றார்.

தி.மு.க. தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். எப்போது மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் ஆகி விட்டாரோ, அப்போதே தலைவர் ஆகிவிட்டார். எனவே இனிமேல் அவருக்கு வைக்கும் சுவரொட்டிகள், வாழ்த்து பேனர்களில் செயல் தலைவரே என்றுதான் இருக்க வேண்டும். தளபதியாக இருந்த அவர் தலைவராகி விட்டார் என்றும் துரைமுருகன் பேசினார்.

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

பல நாடுகளுக்கு செல்ல நேரம் இருந்த பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லாதது, சிந்திக்க வேண்டியது. ஆனால், மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்று விவசாயிகளை சந்தித்து குரல் கொடுத்தார்.

வெளிநாட்டில் இருக்கும் பணத்தை மீட்டு கொண்டு வந்து, இந்தியாவில் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால் இன்று நமது பணத்தை திருடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களுக்கு உடந்தையாக மத்திய அரசு செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதை தட்டிக்கேட்கும் திராணி உள்ள ஒரே கட்சியாக தி.மு.க. இருக்கிறது. தமிழகத்துக்குள் பா.ஜ.க. நுழைய முடியாத இயக்கமாகவும், அரணாகவும் தி.மு.க. செயல்படும். இதுபோன்ற சதிகளை தகர்த்து தமிழக மக்களுக்கும், தமிழகத்துக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசாக தி.மு.க.வை கொண்டு வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story