9 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை அமைத்திருப்பது கண்துடைப்பு நாடகம்


9 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை அமைத்திருப்பது கண்துடைப்பு நாடகம்
x
தினத்தந்தி 25 March 2018 11:00 PM GMT (Updated: 25 March 2018 10:19 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் 9 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை அமைத்திருப்பது கண்துடைப்பு நாடகம் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

தஞ்சாவூர்,

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சை திலகர் திடலில் டி.டி.வி. தினகரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் உண்ணாவிரதத்தை காலை 8 மணிக்கு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தின்போது டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது.

காவிரி நீர் பிரச்சினை தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினை. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு நாடகம் ஆடுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மறுஆய்வு மனு அல்லது, விளக்க மனுவை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. காவிரி விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால்தான் நமக்கு தீர்வு கிடைக்கும்.

வருகிற 29-ந்தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விவசாய சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டப்படி போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

உண்ணாவிரதத்தில், விவசாய பிரிவு தலைவர் துரை.கோவிந்தராஜன், அவைத்தலைவர் அன்பழகன், பொருளாளர் ரெங்கசாமி, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, செந்தமிழன், நிர்வாகிகள் வெற்றிவேல், கலைராஜன், திருச்சி மனோகரன், கதிர்காமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் உண்ணாவிரத போராட்டத்தை உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.
முன்னதாக டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் 9 பேர் கொண்ட மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்து இருப்பது கண்துடைப்பு நாடகம்.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் வர உள்ளது. இந்த நேரத்தில் நாம் இதையும் செய்யாமல் விட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பது சாத்தியம் இல்லை. எனவே தமிழக அரசியல்வாதிகள் வாக்கு வங்கிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் காவிரி நீரை பெற போராட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குறுகிய நாட்கள்தான் உள்ளன. எனவே அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. அதன் பின்னர் எங்களின் செயல்பாடு முழுமையாக உங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story