தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த வைகோவுக்கு பாராட்டு


தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த வைகோவுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 25 March 2018 10:23 PM GMT (Updated: 25 March 2018 10:23 PM GMT)

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த வைகோவுக்கு பாராட்டு தெரிவித்து ம.தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

ம.தி.மு.க. மாணவர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில மாணவர் அணிச் செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு.

* திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்கு நாலாத் திசைகளில் இருந்தும் வரும் ஆபத்துகளை உணர்ந்து, தொலைநோக்கு பார்வையுடன் தி.மு.க.வோடு கூட்டணி ஏற்படுத்திய கழகத்திற்கும், வைகோவுக்கும் ம.தி.மு.க. மாணவர் அணி நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.

* நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, மார்ச் 31-ந் தேதி மதுரையில் தொடங்கி, ஏப்ரல் 9-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் சென்றடையும் தலைவர் வைகோ தலைமையிலான விழிப்புணர்வு நடைப்பயணத்தில், மாணவர் அணி மற்றும் மாணவர் மன்றத்தின் சார்பில் 150 பேர் முழுமையாகப் 10 நாட்களும் பங்கேற்பது என்று மாணவர் அணி கூட்டம் தீர்மானிக்கின்றது.

* ம.தி.மு.க. 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை சிறப்பிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மே 6-ந் தேதி நடைபெறவுள்ள கட்சிக் கொடியேற்று விழா நிகழ்வுகளில், வைகோவின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், ம.தி.மு.க. மாணவர் அணி சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

* ஈரோட்டில் கடந்த 6-ந் தேதி நடந்த ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வகுத்த தீர்மானத்தின் அடிப்படையில், கட்சியின் மாணவர் அணி ‘பெரியார் - அண்ணா’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்துவது என்றும், மாவட்ட அளவில் 22-7-2018, மண்டல அளவில் 12-8-2018, மாநில அளவில் 26-8-2018 ஆகிய நாட்களில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவில் வெற்றிபெறும் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், மண்டல அளவில் வெற்றி பெறும் 3 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், மாநில அளவில் முதல் பரிசு ரூ.1 லட்சம், பெரியார் - அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கம், 2-வது பரிசு ரூ.50 ஆயிரம், பெரியார் - அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கம், 3-ம் பரிசு ரூ.25 ஆயிரம், பெரியார் - அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்படும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story