சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்


சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்
x
தினத்தந்தி 3 April 2018 10:30 PM GMT (Updated: 1 April 2018 10:24 PM GMT)

அறிவிக்கப்படாத ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

காவிரி நதிநீர் விஷயத்தில் பா.ஜனதா துரோகம் செய்யவில்லை. துரோகம் செய்தது காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் தான். மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை முடித்துவிட்டு அறிவிக்கப்படாத, ஆர்ப்பாட்டத்தை நடத்தி கைதாகி இருக்கிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் அவர் இவ்வாறு செய்திருக்கிறார். தமிழக மக்களுக்கு எந்த விதத்திலாவது பாதிப்பு ஏற்பட்டால், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் அதற்கு மு.க.ஸ்டாலின் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

காவிரிக்கு அவர்கள் தியாகம் செய்யவில்லை. மாறாக துரோகம் தான் செய்துள்ளனர். 1974-ல் உச்ச நீதிமன்றத்தின் காவிரி வழக்கை தங்களது சுயலாபத்திற்காக வாபஸ் வாங்கியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்கு தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். அதே போல 10 ஆண்டுகள் மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தது. காவிரி மீது கவனம் செலுத்தாததற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் என அறிவித்த உடன் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தமிழக எல்லையை முற்றுகையிடுவோம் என கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். கர்நாடகாவில் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், மிகப்பெரிய பிரச்சினை வரும். அதற்கு பா.ஜனதா தான் பொறுப்பு என்கிறார்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால், நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். அவர் அண்ணா, பெரியார் வழியில் நடக்கிறாரா என பார்த்தோம். ஆனால் அவர் அ.தி.மு.க. வழியில் தான் நடக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் என்றால் மாநிலங்களில் உள்ள அணைகள் முழுவதும் வாரியத்தின் கட்டுப்பாட்டிற்கு செல்லும். தமிழகமே இதற்கு ஒத்து கொள்ளாது.

அதற்காக தான் நீரை மட்டுமே பங்கிடும் குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லி இருந்தது. தமிழகம் கூட அணைகளின் உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளால் மறுக்கப்பட்ட காவிரி பிரச்சினைக்கு, திருமாவளவன், வைகோ, அன்புமணி ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் அழுத்தம் கொடுக்காத காவிரி விவகாரத்திற்கு, பா.ஜனதா துணையோடு உரிமையை பெற்று தருவோம். அதற்கு கொஞ்சம் காலஅவகாசம் கொடுங்கள் என கேட்கிறோம்.

காவிரி விவகாரத்தில் கொடுக்கப்படும் தீர்வு நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகா மேல்முறையீடு செய்யும். அதற்காக பா.ஜனதா நிரந்தர தீர்வு காண வேண்டும் என நினைக்கிறது. தெளிவான இலக்கை நோக்கி பா.ஜனதா சென்று கொண்டிருக்கிறது. இதை விரும்பாமல், இதற்கு தீர்வு கொண்டு வந்துவிட கூடாது என்பதற்காக ஸ்டாலின் சூழ்ச்சி செய்கிறார்.

ஸ்டெர்லைட் பிரச்சினைக்கு கமல் தூத்துக்குடிக்கும், நியூட்ரினோ பிரச்சினைக்கு வைகோ நடைபயணம் என தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்கவே நினைக்கின்றனர். பா.ஜனதா தமிழகத்தை அமைதி பூங்காவாக, வளர்ச்சி திட்டங்கள் நோக்கி செயல்படுத்த நினைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story