மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்: முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் பங்கேற்பு


மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்: முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 April 2018 2:51 AM GMT (Updated: 3 April 2018 2:51 AM GMT)

மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் முதல் அமைச்சர் பங்கேற்றுள்ளார். #CauveryIssue

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியல் அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, காரைக்காலிலும் அ.தி.மு.க. அறிவித்த உண்ணாவிரத போராட்டம் அங்குள்ள நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதல்வர், துணைமுதல்வர் பங்கேற்பு

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் தொடர்கிறது.  இந்த உண்ணா விரத போராட்டத்தில், முதல் அமைச்சர் பழனிசாமி வந்து கலந்து கொண்டார். அதேபோல், துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வமும் கலந்து கொண்டுள்ளார்.  

அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா, வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதேபோல், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருச்சி, தஞ்சாவூர், சேலம், கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி, திருப்பூர், நாமக்கல், கோவை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, தர்மபுரி, நாகப்பட்டினம், நீலகிரி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 

Next Story