துணை வேந்தர் பதவிக்கு கர்நாடகாவை சேர்ந்தவரை நியமிப்பதா?


துணை வேந்தர் பதவிக்கு கர்நாடகாவை சேர்ந்தவரை நியமிப்பதா?
x
தினத்தந்தி 5 April 2018 10:45 PM GMT (Updated: 5 April 2018 10:34 PM GMT)

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு கர்நாடகாவை சேர்ந்தவரை நியமிப்பதா? என்று அன்புமணி ராமதாஸ், கி.வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா என்ற பேராசிரியர் நியமிக்கப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. நிர்வாகத்திறன் கொண்ட கல்வியாளர்கள் யாருமே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

புதிய துணைவேந்தராக நியமிக்கப்படவுள்ள பேராசிரியர் சூரப்பா கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்குழு செயலாளர், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியர், பஞ்சாபில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருக்கிறார். அவரது நிறை, குறைகள் ஒருபுறமிருக்க, பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக கல்வி நிறுவனத்தின் தலைவராக்கப்படுவது நியாயமற்றது.

இதே போக்குத் தொடர்ந்தால் தமிழக பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே துணைவேந்தராக நியமிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுவிடும். இதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

எனவே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமிக்கும் முடிவை கவர்னர் கைவிட வேண்டும். துணைவேந்தர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களாக தமிழர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் பா.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழுக்கள் மாற்றப்பட்டும், நீட்டப்பட்டும் கடைசியில் வெளிவரும் செய்தி, இதற்கு ஒரு கன்னட மாநிலத்தவர் துணைவேந்தராக நியமிக்கப்படவிருக்கிறார் என்பதாகும். இது உண்மையானால், இதைவிட தலைக்குனிவு தமிழ்நாட்டிற்கு வேறு இருக்க முடியாது.

இங்குள்ள தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எவருக்குமே தகுதியில்லாததுபோல் கருதி, இப்படி ஒரு கன்னடப் பேராசிரியர் நியமனம் என்றால், அதன் பொருள் என்ன?. இது தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள், கல்வி அறிஞர்கள் மீது மறைமுகமாக சேற்றை வாரி இறைக்கும் வன்கொடுமை அல்லவா?.

இப்போக்கினைத் தொடர்ந்து கவர்னர் கையாள்வதும், தமிழக ஆளுங்கட்சி அதற்கெல்லாம் வாய்மூடி, கைதட்டி, மவுனசாமிபோல் இருப்பதும் அரசியலமைப்புச் சட்ட உரிமைப்படி நியாயம்தானா?. இதை அனைத்து கட்சிகளும், கல்வி அமைப்புகளும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story