காவிரி பிரச்சினைக்காக என்ன தண்டனை கிடைத்தாலும் கவலையில்லை: மு.கஸ்டாலின்


காவிரி பிரச்சினைக்காக என்ன தண்டனை கிடைத்தாலும் கவலையில்லை: மு.கஸ்டாலின்
x
தினத்தந்தி 7 April 2018 4:02 AM GMT (Updated: 7 April 2018 4:02 AM GMT)

காவிரி பிரச்சினைக்காக என்ன தண்டனை கிடைத்தாலும் கவலையில்லை என்று மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார். #Mkstalin

சென்னை,

திமுக செயல்தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.கஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்பு பகுதியில் இருந்து இன்று காவிரி உரிமை மீட்பு பயணம் துவங்கப்பட உள்ளது. இந்த பயணத்திற்காக திருச்சிக்கு புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஸ்டாலின் கூறியதாவது:- 

”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய முழு கடையடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது. காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் அஞ்சல் அட்டையில் கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம். இன்று திருச்சியில் துவங்கும் காவிரி உரிமை மீட்பு பயணம் ஏப்ரல் 13 கடலூரில் முடிவடையும். அங்கு பொதுகூட்டம் நடத்தப்படும். பிறகு அங்கிருந்து சென்னை வந்து, ஆளுநரை சந்திப்போம். 

நடைபயணம் முடிந்த பிறகு தேவைப்பட்டால் அனைத்து கட்சிகளும் மீண்டும் கூடி ஆலோசிப்போம். காவிரிக்காக நடைபெறும் மீட்பு பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்; இரு குழுக்களாக பயணத்தை தொடர்கிறோம். பிரதமர் யாரையும் சந்திக்க தயாராக இல்லை. அதனால் அவர் தமிழகம் வரும் போது கருப்புக் கொடியுடன் சென்று அவரை சந்திக்க உள்ளோம். காவிரிக்காக என் மீது போடப்பட்டுள்ள வழக்கை மனமார ஏற்றுக்கொள்ள தயார். காவிரி பிரச்னையில் எங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் அதைப்பற்றி கவலையில்லை” என்றார்.

Next Story