திண்டிவனம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திட்டத்தை கைவிடுவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்


திண்டிவனம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திட்டத்தை கைவிடுவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 5 May 2018 10:30 PM GMT (Updated: 5 May 2018 10:04 PM GMT)

திண்டிவனம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தை கைவிடுவது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை,

சென்னையிலிருந்து சேலத்திற்கு விரைவுச் சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, திண்டிவனம்-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியை செலவிட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

இதனால் திண்டிவனம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களின் பரிந்துரை அடிப்படையிலேயே இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.

தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளை இணைக்கும் மிக முக்கியமான சாலையின் விரிவாக்கத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு, அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு சென்னை-சேலம் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது. திண்டிவனம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தை கைவிடுவது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மலைகளில் குவிந்து கிடக்கும் இரும்புத் தாதுவை ஜிண்டால் குழுமம் வெட்டி எடுக்கவுள்ளது. அந்த நிறுவனத்தின் வசதிக்காகவே சேலத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு சாலை அமைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு துணையாக இருப்பதற்காக பினாமி ஆட்சியாளர்களுக்கு பெருமளவில் பொருளாதார பயன்கிடைக்கும். அதனால் தான் முக்கியமான சாலையை விரிவாக்கும் பணியை கைவிட்டு, மக்களுக்கு பயனில்லாத சென்னை-சேலம் திட்டத்தை செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு பினாமி அரசு பரிந்துரைத்துள்ளது. இதை மன்னிக்க முடியாது.

எனவே, தமிழகத்தின் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் 45-வது தேசிய நெடுஞ்சாலையை தாம்பரம் முதல் திண்டிவனம் வழியாக திருச்சி வரை 6 வழிப்பாதையாக அகலப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story