ராசிபுரத்தைச்சேர்ந்த மாணவி ஜீவிதா ஹால்டிக்கெட்டில் குளறுபடி: தேர்வு எழுத அனுமதி மறுப்பு


ராசிபுரத்தைச்சேர்ந்த மாணவி ஜீவிதா ஹால்டிக்கெட்டில் குளறுபடி: தேர்வு எழுத அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 6 May 2018 5:06 AM GMT (Updated: 6 May 2018 5:22 AM GMT)

ராசிபுரத்தை சேர்ந்த ஜீவிதாவுக்கு சேலத்தில் 2 இடங்களில் தேர்வு எழுத ஹால்டிக்கெட் தரப்பட்டதால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. #NEET #Jeevitha

ராசிபுரம், 

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.   மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் குறை கூறப்பட்டது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ-மாணவிகளில் 5,700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற சில வெளிமாநிலங்களில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து, மாணவர்கள் அந்த மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுத்தது. மேலும் அரசியல் கட்சியினர், தமிழ்ச்சங்கத்தினர், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர். வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள் பெற்றோருடன் பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர்.

இன்று காலை 10 மணிக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு துவங்கியது. முன்னதாக காலை 7.30 மணி முதல் பலத்த சோதனைகளுக்கு பிறகு மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 9.30 மணிக்கு பிறகு மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியில் தேர்வு எழுந்த வந்த மாணவி ஜீவிதாவை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து உள்ளனர். ஹால்டிக்கெட் பதிவெண்ணில் குளறுபடி இருந்ததாகவும் இதனால், அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவி செய்வதறியாமல் திகைத்துள்ளார்.இதனையடுத்து அங்கிருந்த பெற்றோர்கள் மாணவியை தேர்வு எழுத அனுமதிக்குமாறு தெரிவித்தனர்.இந்த குழப்பத்திற்கு யார் காரணம் என கண்டறிந்து அந்த மாணவி உடனடியாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என அங்குள்ள கூடியுள்ள பெற்றோர்கள் தெரிவித்தனர். தேர்வு அலுவலர்கள் மாணவியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஹால்டிக்கெட் ஒரிஜினல் இல்லை

மாணவி ஜீவிதா ஹால் டிக்கெட்டில் குழப்பம் இருந்தது பற்றி விளக்கம் அளித்துள்ள தென் மண்டல சிபிஎஸ்இ இயக்குநர் சீனிவாசன், “ ஹால்டிக்கெட் ஒரிஜினல் இல்லை என்று தெரிவித்து உள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சீனிவாசன் மேலும் கூறும் போது, “ மாணவி ஜீவிதா கொண்டு வந்த ஹால்டிக்கெட் ஒரிஜினல் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மாணவி ஜீவிதாவின் ஹால்டிக்கெட்டில் குழப்பம் இல்லை. ஜோடிக்கப்பட்டதாக தெரிகிறது. ஹால் டிக்கெட்டில் பெயர் இருந்தாலும், தேர்வு மையத்தில்  மாணவி பெயர் இருக்க வேண்டியது அவசியம்” இவ்வாறு தெரிவித்தார். Next Story