திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ரஜினி, கமல், அஜித், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரங்கல்


திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ரஜினி, கமல், அஜித், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரங்கல்
x
தினத்தந்தி 7 Aug 2018 10:10 PM GMT (Updated: 2018-08-08T03:40:04+05:30)

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Karunanidhi #RIPKarunanidhi

சென்னை,

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.

கருணாநிதியின் மறைவு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘அண்ணா இருந்த போதும் கழகம் காத்திட வளர்ந்த இரு தம்பிகள் கலைஞரும் எம்,ஜி,ஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார்’ என்று அவர்  தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் மறைவு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், பூமியை விட்டு நீங்கள் சென்றாலும் தமிழ் மீதான அன்பும் வேட்கையும் என்றும் நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர்கள் விஜயகுமார், விஷ்ணு, விக்ராந்த், நடிகைகள் ஸ்ரீபிரியா, குஷ்பு, ரஜினி மகள் ஐஸ்வர்யா, ஆர்த்தி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


Next Story