அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திருமணம் செய்ய இருந்த மணப்பெண் ‘திடீர்’ மாயம்


அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திருமணம் செய்ய இருந்த மணப்பெண் ‘திடீர்’ மாயம்
x
தினத்தந்தி 3 Sep 2018 11:30 PM GMT (Updated: 3 Sep 2018 11:20 PM GMT)

பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை வருகிற 12-ந் தேதி திருமணம் செய்ய இருந்த மணப்பெண் திடீரென மாயமானார். அவரை கடத்திச்சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (வயது 43). இவர் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ளார். எஸ்.ஈஸ்வரனுக்கும், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள உக்கரம் பெரியார் நகரைச் சேர்ந்த ரத்தினசாமி-தங்கமணி தம்பதியின் மகள் சந்தியா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

வருகிற 12-ந் தேதி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து வைக்க இருவீட்டை சேர்ந்தவர்களும் முடிவு செய்திருந்தனர். இதனால் திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர்.

திருமண அழைப்பிதழ் அச்சடித்து, எம்.எல்.ஏ. வீட்டாரும், பெண் வீட்டாரும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து வந்தனர்.

மணமகன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பதால் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் ஏராளமானோர் திருமணத்தில் கலந்துகொள்ள இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மணப்பெண் சந்தியா, சத்தியமங்கலத்தில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் ரத்தினசாமி, அந்த உறவினரிடம் விசாரித்தார். அப்போது சந்தியா அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினசாமி, தங்கமணி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் சந்தியாவை தேடினார்கள். அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து மணப்பெண்ணின் தந்தை ரத்தினசாமியும், தாய் தங்கமணியும் இது குறித்து கடத்தூர் போலீசில் புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் ‘சந்தியாவுக்கும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கொளத்துப் பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் இருந்ததாக’ கூறப்பட்டு இருந்தது. மேலும் அந்த மனுவில், ‘அந்த நபர்தான் தங்களுடைய மகளை கடத்திச்சென்று உள்ளார்’ என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story