குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது சென்னையில் மேலும் 300 சாதாரண கட்டண பஸ்கள்


குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது சென்னையில் மேலும் 300 சாதாரண கட்டண பஸ்கள்
x
தினத்தந்தி 21 Sep 2018 10:30 PM GMT (Updated: 21 Sep 2018 8:51 PM GMT)

சென்னையில் பயணிகளை கவருவதற்காக, மாநகர போக்குவரத்து கழகம் மேலும் சாதாரண கட்டண பஸ்களை இயக்குகிறது. அவற்றில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி 20-ந்தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. சுமார் 20 சதவீதம் முதல் 54 சதவீதம் வரை பஸ் கட்டணம் அதிகரித்தது. இந்த பஸ் கட்டண உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான பொதுமக்கள் பஸ் பயணத்தை தவிர்த்து மின்சார ரெயில், ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்த தொடங்கினர்.

சென்னை மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 6 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால், சில நாட்களிலேயே அரசு போக்குவரத்து கழகம் பஸ் கட்டணத்தை சிறிதளவு குறைத்தது.

அதன்படி சென்னை மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயானது. அதாவது சாதாரண கட்டண பஸ்களில் (வெள்ளை நிற பெயர் பலகை பொருத்தப்பட்டது) மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படும். சென்னையை பொறுத்தவரையில், சாதாரண கட்டண பஸ்கள், விரைவு பஸ்கள் (பச்சை நிற பெயர் பலகை பொருத்தப்பட்டது) மற்றும் சொகுசு பஸ்கள் என 3 வகையான பஸ்கள் இயக்கப்பட்ட போதும், பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து மாநகர பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

அதைத் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க போக்குவரத்து அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது, குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பஸ்களில் வரும் நிலையிலும், அவர்களில் யாரும் டிக்கெட் எடுக்காமல் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் போக்குவரத்து அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

இதனால், அவர்கள் அடிக்கடி பஸ்களில் களஆய்வு மேற்கொண்டனர். இதனால் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதும் உண்டு. எனினும் பயணிகளின் எண்ணிக்கை அவர்கள் எதிர்பார்த்த அளவில் அதிகரிக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலையில் எதிரொலியாக மீண்டும், பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால், மின்சார ரெயில் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கு தங்கள் பயணத்தை மாற்றிக்கொண்ட பஸ் பயணிகளை மீண்டும் பஸ்களில் பயணிக்க ஈர்க்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

அதாவது, சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னையில் சாதாரண கட்டண பஸ்கள், விரைவு பஸ்கள், சொகுசு பஸ்கள் என 3,300 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து கடந்த 4 வாரங்களில் பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரம் அதிகரித்து உள்ளது.

அதைத் தொடர்ந்து பஸ் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் கூடுதலாக 300 சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி தற்போது 1,100 சாதாரண கட்டண பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், பயணிகள் சாதாரண கட்டண பஸ்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் அவற்றில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்று பெரிய அளவில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டுள்ளது.

இதே போன்று விரைவு பஸ்களில் குறைந்த கட்டணம் ரூ.7 என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பஸ் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story