தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 21 Sep 2018 11:00 PM GMT (Updated: 21 Sep 2018 9:09 PM GMT)

வங்கக்கடல் பகுதியில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று புயலாக மாறி நேற்று முன்தினம் நள்ளிரவு ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடந்தது.

இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். சென்னை நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அது உருவாகும்பட்சத்தில், தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் (ஞாயிறு, திங்கட்கிழமை) ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

செங்கம் 5 செ.மீ., திருமங்கலம் 4 செ.மீ., போச்சம்பள்ளி, சித்தம்பட்டி, ஓசூர், அம்பாசமுத்திரம், பாரூர், திருப்பத்தூர்(வேலூர்), பெணுகொண்டாபுரம் தலா 3 செ.மீ., ஊத்தங்கரை, திருவண்ணாமலை, பேச்சிப்பாறை, பாபநாசம், போளூர், குழித்துறை, சேரன்மாதேவி, அஞ்செட்டி தலா 2 செ.மீ. மற்றும் சில இடங்களில் லேசான மழையும் பெய்து இருக்கிறது.

Next Story