பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘ரெயில்-18’ தயார்


பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘ரெயில்-18’ தயார்
x
தினத்தந்தி 23 Sep 2018 8:30 PM GMT (Updated: 23 Sep 2018 8:18 PM GMT)

பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ‘ரெயில்-18’ என்ற நவீன வசதி கொண்ட விரைவு ரெயில் தயார் நிலையில் உள்ளது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) நடத்தப்படுகிறது.

சென்னை,

இந்தியாவில் முதன் முறையாக 16 பெட்டிகளை கொண்ட அதிவிரைவு ரெயிலை சென்னை, பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலை(ஐ.சி.எப்.) வடிவமைத்து தயாரித்து உள்ளது. நடப்பு ஆண்டில் தயாரிக்கப்பட்டு இருப்பதால் இந்த ரெயிலுக்கு ‘ரெயில்-18’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

நாட்டில் தற்போது இயக்கத்தில் உள்ள ‘சதாப்தி’ போல, பெருநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரெயில்களுக்கு பதிலாக இந்த புதுவடிவ ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும்.

இந்த ரெயிலுக்கு என்று தனியாக என்ஜின் அமைக்கப்படவில்லை. புறநகர் மின்சார ரெயில்களில் இருப்பது போன்று ரெயிலில் முன்புறமும், பின்புறமும் டிரைவர் அறை மட்டும் அமைக்கப்பட்டு இருக்கிறது. 2 பெட்டிகளுக்கு ஒரு மின்சார மோட்டார் வீதம் ரெயிலை இயக்குவதற்கான மின்சார மோட்டார்கள் ரெயில் பெட்டியின் கீழ் அமைக்கப்பட்டு உள்ளன. முதன் முறையாக நெடுந்தொலைவு மற்றும் புறநகர் ரெயில்களுக்கு இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த ரெயிலில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ரெயில் பெட்டிக்குள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நடைமேடையில் இருந்து ரெயிலுக்கு உள்ளே செல்ல முடியும். இதற்காக தானியங்கி கதவுகள் மற்றும் நகரும் படித் தகடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

நகரும் படித் தகடுகள், ரெயில் நின்ற உடன் தானாகவே வெளியே வந்து ரெயில் பெட்டிக்கும், நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியை மூடிவிடும். பயணிகள் ரெயிலில் ஏறும்போதும், இறங்கும்போதும் தவறி தண்டவாளத்தில் விழாமல் இருக்க இது உதவும். மேலும் ரெயில் நிறுத்தப்பட்ட பின்னர் தானியங்கி கதவுகள் திறக்கும். அதுபோலவே அனைத்து தானியங்கி கதவுகளும் மூடிய பிறகே ரெயில் புறப்படும். இதனால் பெருமளவு விபத்துகள் தவிர்க்கப்படும்.

இந்த ரெயிலில் உள்ள 16 பெட்டிகளும் குளிர்சாதன வசதியுடன் கூடிய உட்காரும் இருக்கைகள் (ஏ.சி.சேர் கார்) கொண்டவை ஆகும். வை-பை வசதி, ஒவ்வொரு இருக்கையின் கீழ் செல்போனை சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சாய்வு வசதி கொண்ட உட்காரும் இருக்கைகள், விமானங்களில் இருப்பது போல் படிப்பதற்கு உதவும் சுழலும் விளக்குகள், பயோ கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

ரெயிலின் வெளிப்பகுதியில் இருக்கும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப குளிர்வசதியை தானாகவே ரெயிலின் அமைப்பு சரி செய்து கொள்ளும். ரெயிலின் வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் ஒன்றன் மீது ஒன்று இணைக்கப்பட்டு இருப்பதால் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ரெயில் பெட்டிகளை இணைக்கும் இணைப்புகளும் வெளியே தெரியாத வகையில் முழுமையாக மூடப்பட்டு இருக்கும்.

இதனால் ரெயிலின் உட்புறம் ஆரம்பத்தில் இருந்து முடிவு பகுதி வரை செல்ல முடியும். இந்த ரெயில் மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது. குறிப்பாக 80 சதவீதம் உள்நாட்டு கருவிகள் மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஒரு ரெயிலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாக இருந்தால் சுமார் ரூ.150 முதல் ரூ.175 கோடி வரை செலவிட வேண்டி வரும். ஆனால் பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இந்த ரெயில் ரூ.100 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் ரெயில் தயாரிப்பதற்கு வெளிநாடுகளில் 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் இங்கு 18 மாதத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 2-வது வாரம் இந்த ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இந்த ரெயில் முதன் முதலாக மத்தியபிரதேச தலைநகர் போபால்- டெல்லி இடையே இயக்கப்பட இருக்கிறது.

என்ஜின் தனியாக இல்லாததால் சேரும் இடத்தை அடைந்த உடன் அப்படியே மறுமுனையில் இருந்து மீண்டும் இயக்க முடியும். இதனால் என்ஜினை கழற்றி மாட்டுவது போன்றவற்றுக்காக ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படுகிறது. ரெயில் இயக்கத்தின்போது ஏற்படும் அதிர்வை உட்புறம் உணராமல் இருப்பதற்காக நவீன கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.

துருப்பிடிக்காத வகையில் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. பயணிகளை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவலை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story