மு.க.ஸ்டாலின் நிழலுடன் யுத்தம் செய்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


மு.க.ஸ்டாலின் நிழலுடன் யுத்தம் செய்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 24 Sep 2018 10:30 PM GMT (Updated: 24 Sep 2018 9:23 PM GMT)

மு.க.ஸ்டாலின் நிழலுடன் யுத்தம் செய்கிறார் என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

களியக்காவிளை,

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ரூ.28 ஆயிரம் கோடி செலவில் துறைமுகம் அமைக்க ஏற்பாடு செய்தது. அதனை சிலர் வேண்டும் என்றே தடுத்து வருகிறார்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கூறி வருகிறார். மகன் மீதான பாசம் காரணமாக அவர் அவ்வாறு கூறி வருகிறார். மத்திய அரசின் தலையீடு காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பது தவறு. சட்டத்தை பார்க்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களை கவனிக்க வேண்டும். இதை எல்லாம் செய்யும் முன்பு பா.ஜனதாவை குறை சொல்வது சரியல்ல.

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தீர்ப்பாயம் மற்றும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக ஒரு தரப்பு மக்கள் கூறியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு. அந்த ஆலை மூடப்பட்டது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

பா.ஜனதாவுடன் ஒரு போதும் தி.மு.க. கூட்டணி அமைக்காது என்று அந்த கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சிறந்த வீரரான அவர் தற்போது நிழலுடன் யுத்தம் செய்கிறார். கடந்த 1962-க்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருகிறது.

பா.ஜனதா கட்சி யாருடன் கூட்டணி சேரும் என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும். கூட்டணி இல்லை என்று சொல்லவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story