மாதாந்திர பஸ் பயண அட்டை கட்டணத்தை அதிகரிக்க கூடாது தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


மாதாந்திர பஸ் பயண அட்டை கட்டணத்தை அதிகரிக்க கூடாது தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Sep 2018 11:05 PM GMT (Updated: 25 Sep 2018 11:05 PM GMT)

மாதாந்திர பஸ் பயண அட்டை கட்டண அதிகரிப்பு முயற்சியை கைவிட வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மாதாந்திர பஸ் பயண அட்டைக்கான கட்டணத்தை ரூ.1000-ல் இருந்து ரூ.1300 ஆக உயர்த்த அ.தி.மு.க. அரசு ஆலோசித்து வருவது கண்டனத்திற்குரியது.

சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களின் அன்றாட பயணத்திற்கு மிகவும் பயனுள்ள இந்த பஸ் பயண அட்டைக் கட்டணத்தை உயர்த்துவது, போக்குவரத்துக் கழகங்களுக்கு மேலும் இழப்புகளை ஏற்படுத்தி, அரசு போக்குவரத்துக் கழகங்களை திவாலாக்கிட அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளும் முயற்சியாகவே தெரிகிறது.

2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் 17-11-2011 அன்றே 50 சதவீத பஸ் கட்டணத்தை உயர்த்தியதால் 2 கோடி பயணிகள் அரசு பஸ்களை பயன்படுத்தி வந்தநிலை, 1 கோடியே 80 லட்சம் பயணிகளாக குறைந்தது. பிறகு 19-1-2018 அன்று மேலும் 50 சதவீதம் பஸ் கட்டணத்தை உயர்த்தியதால், அரசு பஸ்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சமாகக் குறைந்துவிட்டது.

உரிய நேரத்திற்கு வராத பஸ்கள், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து செல்லும் பஸ்கள் என்று அ.தி.மு.க. அரசின் பல்வேறு நிர்வாகக் குழப்பங்களால் அரசு பஸ்களை மக்கள் பயன்படுத்துவது அ.தி.மு.க. ஆட்சியில் படிப்படியாகக் குறைந்து வருவதில் இருந்து ஏழை, எளியவர்களின் போக்குவரத்து வசதிகளை அ.தி.மு.க. அரசு எப்படி சீர்குலைத்து வருகிறது என்பது தெரிகிறது.

மேலும், பஸ்களை நாட்டுடைமை ஆக்கிய சோஷலிச அடிப்படையைத் தகர்த்து, மீண்டும் பஸ்களை தனியார் வசம் தாரை வார்த்திட வழி ஏற்படுத்திக் கொடுப்பதைப் போலவும் தெரிகிறது. இப்போதுகூட முதல்-அமைச்சர் கொடியசைத்து துவக்கிவைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, புதிதாக வாங்கப்பட்ட 448 பஸ்கள் இன்னும் இயக்கப்படாமல் ‘வாரண்டி’ காலத்தையும் இழக்கும் அபாயத்தில் பணிமனைகளில் நின்று கொண்டிருக்கின்றன.

ஆயிரம் ரூபாய் மாதாந்திர பஸ் பயண அட்டையை ரூ.1300 ஆக உயர்த்தத் துடிக்கும் அரசு, தலா ரூ.30 லட்சம் செலவில் வாங்கப்பட்ட இந்த 448 பஸ்களை இயக்காமல் நிறுத்திவைத்திருப்பது கேடுகெட்ட நிர்வாகத்திற்கு, கண்ணெதிரே காணக் கிடைத்த உதாரணமாக விளங்குகிறது.

போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைக்க, கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குழு ஒரு அறிக்கையினைத் தயார் செய்து, அதன் பரிந்துரைகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானே நேரில் சென்று முதல்-அமைச்சரிடம் கொடுத்தும், அந்த பரிந்துரைகளை எல்லாம் உரிய பரிசீலனைக்கு உட்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள அ.தி.மு.க. அரசு, ஊழலை எப்படி செய்வது, எப்படியெல்லாம் மக்களை வதைக்கும் கட்டண உயர்வுகளை அறிவிப்பது என்ற எண்ணத்துடனேயே எப்போதும் செயல்பட்டு வருகிறது.

போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், கட்டண உயர்வு மட்டுமே எங்களுக்குக் கைவந்த கலை என்று அ.தி.மு.க. அரசு செயல்படுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, மாதாந்திர பஸ் பயண அட்டை கட்டணத்தை, தற்போதுள்ள ரூ.1000-ல் இருந்து ரூ.1300 ஆக அதிகரிக்கும் முயற்சியை, அ.தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story