பருவமழையை எதிர்கொள்ள எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்


பருவமழையை எதிர்கொள்ள எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
x
தினத்தந்தி 27 Sep 2018 10:30 PM GMT (Updated: 27 Sep 2018 8:14 PM GMT)

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்தார்.

சென்னை,

சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காலங்களில் சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகள் குறித்து விரிவான சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் வாரந்தோறும் சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துகிறார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்த பருவமழை காலத்துக்காக 662 பல்துறை மண்டலக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பெண் முதல்நிலை மீட்பாளர்கள் 9,162 பேர் உள்பட 30,759 முதல்நிலை மீட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நீர்நிலைகளில் இருந்த 8,417 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

6,534 பாலங்களிலும், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 785 சிறுபாலங்களில் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. 68 பாலங்களில் கூடுதல் துவாரங்கள் போடப்பட்டும் குழாய்கள் அமைக்கப்பட்டும் உள்ளன. 4,490 செறிவூட்டும் கிணறுகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 7,986 செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் செறிவூட்டும் குளங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 7,256 தடுப்பணைகள், 4,917 நீர் ஊடுருவும் குளங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

14,583 குட்டைகள், குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு உள்ளன. 55 லட்சத்து 62 ஆயிரத்து 386 வீடுகள், 5 லட்சத்து 61 ஆயிரத்து 308 நிறுவனங்களில் மழைநீர் சேகரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டன. 30,046 குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் வண்டல் மண் தூர்வாரப்பட்டது. அந்த வண்டல் மண்ணின் அளவு 7.10 கோடி கனமீட்டர். இதன் மூலம் 6.35 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்.

மழை குறைவாக பதிவான மாவட்டங்களில் வறட்சி தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கும் கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவை வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் செயல்திட்டம் உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story