துணை முதல்வர் பன்னீர்செல்வம் இப்போது தனி மனிதராகி விட்டார் -டிடிவி தினகரன்


துணை முதல்வர் பன்னீர்செல்வம் இப்போது தனி மனிதராகி விட்டார் -டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 6 Oct 2018 10:00 AM GMT (Updated: 6 Oct 2018 10:00 AM GMT)

ஓ.பன்னீர்செல்வம் இப்போது தனி மனிதராகி விட்டார் என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

பெங்களூர்: 

கடந்த செப்டம்பர் கடைசி வாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்னை தொடர்பு கொண்டார் என்பதையும் அவர் ஒப்புக்கொள்வார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை இன்று, டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். அதன்பிறகு நிருபர்களிடம், டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

என்னை ஏன் ஓ.பி.எஸ் ரகசியமாக சந்திக்க வேண்டும்? அதுவும்  ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் என்னை ஏன் பார்க்க வேண்டும் அவர்.

ஓபிஎஸ் துரோக சிந்தனை கொண்டவர். எடப்பாடி பழனிச்சாமியை ஒதுக்கி விட்டு என்னுடன் சேர்ந்து செயல்பட விரும்பினார். எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் என்று துடிக்கிறார். அதிமுக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, வாக்களித்தவர் ஓ.பி.எஸ். ஆனால் ராஜவிசுவாசம் குறித்து அவர் பேசுவது நியாயமா. ஓபிஎஸ் என்னிடம் பேசியது பொய் தகவல் என எல்லோரும் சொல்லி வந்தீர்கள். ஆனால் அவரே அதை ஒப்புக்கொண்டுவிட்டார்.

செப்டம்பர் கடைசி வாரத்தில் அதே நண்பர் மூலம், ஓ.பன்னீர்செல்வம் என்னை மீண்டும் தொடர்பு கொண்டார். இதையும் ஓ.பன்னீர்செல்வம் வாயால் ஒப்புக்கொள்வார் அந்த சூட்சுமம் எனக்கு தெரியும்.

இன்னும் கொஞ்சம் அவருக்கு நேரம் கொடுக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் எல்லாவற்றையும் ஒத்துக் கொள்வார். அப்படி ஒப்புக்கொள்ளாவிட்டால் அந்த தகவலை நான் வெளியிடுவேன். ஓபிஎஸ் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். இதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.

அரசியலுக்காக முன்னுக்குப் பின் முரணாக நடக்கும் பழக்கம் எனக்கு இல்லை. உண்மைன்னா உண்மை என்பேன். இல்லை என்றால் இல்லை என்பேன். ஓ.பன்னீர்செல்வம் இப்போது தனி மனிதராகி விட்டார். அவருடன் இருந்த பத்து பத்தினைந்து பேரையும் அவர்கள் இழுத்து விட்டார்கள் என்று தினகரன் தெரிவித்தார்.

Next Story