மோடியும், அமித்ஷாவும் ‘ரிங் மாஸ்டர்கள்’ அல்ல; ‘கிங் மாஸ்டர்கள்’ தமிழிசை சவுந்தரராஜன் பதில்


மோடியும், அமித்ஷாவும் ‘ரிங் மாஸ்டர்கள்’ அல்ல; ‘கிங் மாஸ்டர்கள்’ தமிழிசை சவுந்தரராஜன் பதில்
x
தினத்தந்தி 24 Oct 2018 11:00 PM GMT (Updated: 24 Oct 2018 7:41 PM GMT)

மோடியும், அமித்ஷாவும் கிங் மாஸ்டர்கள் என்று மு.க.ஸ்டாலின், தம்பிதுரைக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். இதில் தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், செயலாளர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின் முடிவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

‘கிங் மாஸ்டர்கள்’

கேள்வி:- அ.தி.மு.க.வின் ‘ரிங் மாஸ்டர்’ மோடி என மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வின் ‘ரிங் மாஸ்டர்’ அமித்ஷா என்று தம்பிதுரை எம்.பி.யும் கூறியிருக்கின்றனரே?

பதில்:- 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்த பா.ஜ.க.வை, 22 மாநிலங்களில் ஆட்சி செய்யும் நிலைக்கு உயர்த்தியவர் அமித்ஷா. இது திறமையான நிர்வாகத்துக்கு சாட்சி. அதேபோல காங்கிரஸ் அல்லாத ஒரு ஆட்சி என்பதில் தீவிரமாகவும், அதேநேரத்தில் மக்கள் நலப்பணிகளில் அக்கறையாகவும் உழைக்க முடியும் என்று நிரூபித்து வருபவர் நரேந்திரமோடி. ஆக நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ‘ரிங் மாஸ்டர்கள்’ அல்ல, ‘கிங் மாஸ்டர்கள்’. மு.க.ஸ்டாலின், தம்பிதுரை போன்றோருக்கு இதுதான் நல்ல பதிலாக இருக்கும்.

ஜெயக்குமார் மீது விசாரணை

கேள்வி:- தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தீர்ப்பு எப்படி இருக்கும்என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை எதிர்கொள்வோம் என்பதில்லாமல், குற்றாலத்தை மினி கூவத்தூராக மாற்றியிருக்கிறார்கள். அடுத்து வேறு எங்கோ சென்றுள்ளார்கள் என்று தகவல் வருகிறது. இது நல்லதல்ல.

கேள்வி:- அமைச்சர் ஜெயக்குமார் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் முழுமையான விசாரணைக்கு தயாராக வேண்டும். உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர் குற்றமற்றவரா? இல்லையா? என்பது தெரியவேண்டும். எந்த பெண்ணும் தமிழகத்தில் பாதிக்கப்படவே கூடாது.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

Next Story