சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2018 12:00 AM GMT (Updated: 2 Nov 2018 9:21 PM GMT)

தீபாவளி பண்டிகையான வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை,

இந்தியாவில் பட்டாசு களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், பட்டாசுகளை வெடிக்க சுப்ரீம்கோர்ட்டு கடும் நிபந்தனைகளை விதித்து தீர்ப்பு வழங்கியது.

அதன்படி தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப் பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. எனினும் தீபாவளி பண்டிகை அன்று எந்த 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை மாநில அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தது.

சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் பட்டாசு வெடிக்க எப்போது அனுமதிப்பது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொண்டு வந்தார்.

இரவு 7 மணி முதல் 9 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கலாமா? என்பது குறித்து அரசு பரிசீலிப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்திருந்தார்.

பட்டாசு வியாபாரிகளும், சிறுவர்களும் எப்போது பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோருவதற்கு சுப்ரீம்கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் நலனையும், நமது கலாசாரத்தையும் பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் தன்னையும் ஒரு எதிர்வாதியாக இணைத்துக் கொண்டது.

இவ்வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கடந்த 23-ந்தேதி வழங்கிய உத்தரவில், சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 முதல் இரவு 10 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு சுப்ரீம்கோர்ட்டு நேரம் நிர்ணயம் செய்தது. இந்த 2 மணி நேரம் போதாது என்பதால் கூடுதலாக 2 மணி நேரம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம்கோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்க இயலாது எனவும், அந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story