நேர கட்டுப்பாடு எதிரொலி: பட்டாசு விற்பனை கடுமையாக பாதிப்பு - உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அதிர்ச்சி


நேர கட்டுப்பாடு எதிரொலி: பட்டாசு விற்பனை கடுமையாக பாதிப்பு - உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 6 Nov 2018 11:30 PM GMT (Updated: 6 Nov 2018 7:56 PM GMT)

நேர கட்டுப்பாடு எதிரொலியாக பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிவகாசி,

இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க சுப்ரீம்கோர்ட்டு நேர கட்டுப்பாடு விதித்ததை தொடர்ந்து பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சுமார் 850 பட்டாசு ஆலைகள் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசு வகைகள் இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதனால் இந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க சிலர் தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடினர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதில் கடுமையான நிபந்தனைகளை கோர்ட்டு விதித்தது.

அதன்படி தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில் தீபாவளி அன்று அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது. தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், இந்த நேரத்தை மாநில அரசே தீர்மானித்து கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து தமிழக அரசு தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவித்தது.

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்த போது அதிகாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அனுமதி கேட்டது. இந்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. 2 மணி நேரத்தில் குறைந்த அளவு பட்டாசுகள் தான் வெடிக்க முடியும். மேலும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பட்டாசு விற்பனை கடந்த ஆண்டைவிட 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிவகாசியை சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் கூறியதாவது:-

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் ஒரு வருடம் முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்து தீபாவளி விற்பனையைதான் நம்பி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதித்ததை தொடர்ந்து வழக்கமாக விற்பனையாகும் பட்டாசுகளில் பாதிக்கும் குறைவாகத்தான் விற்பனையானது. இதுவரை இப்படி ஒரு பாதிப்பு பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டது இல்லை. இதே நிலை நீடித்தால் இந்த தொழிலை நம்பி உள்ள 8 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வருடத்துக்கு ஒரு முறை வரும் தீபாவளி பண்டிகைக்கு இப்படி கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதால் தான் விற்பனை பாதிப்பு. எனவே இனி வரும் காலங்களில் இந்த நேர கட்டுப்பாட்டை தளர்த்தி வருடத்திற்கு ஒரு முறை எப்போதும் போல நேரக்கட்டுப்பாடு இல்லாமல் வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

விற்பனை பாதிப்பு குறித்து பட்டாசு கடை உரிமையாளர் சரவணன் கூறியதாவது:-

பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு கடுமையான நிபந்தனைகளை விதித்த போதே பட்டாசு விற்பனை முன்பு போல இருக்காது என்று எனக்கு தோன்றியது. ஆனால் இதுபோன்ற ஒரு மோசமான பாதிப்பு வரும் என்று நினைக்கவில்லை. செவ்வாய்க்கிழமை காலையில் தீபாவளி என்றால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் அதிகப்படியான விற்பனை இருக்கும். சாப்பிட கூட நேரம் இல்லாமல் விற்பனை செய்த காலம் போய் இந்த வருட தீபாவளியையொட்டி கடந்த 3 நாட்களும் விற்பனை இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டோம். வழக்கமாக தீபாவளி விற்பனை எல்லாம் முடிந்த பிறகு எவ்வளவு லாபம் என்று பார்ப்போம். இந்த தீபாவளிக்கு வாங்கி வைத்த பட்டாசு வகைகள் பாதி அளவு விற்பனை ஆகாமல் இருக்கிறது. இதனால் நஷ்டம் தான் அதிகமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பட்டாசு கடைகளை மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்று விட வேண்டியது தான் என்று அவர் கூறினார்.

சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் இந்த தீபாவளியின் போது போதிய விற்பனை இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநிலை நீடித்தால் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்பட்ட சிவகாசியில் பட்டாசு தொழில்கள் முடங்கி இங்கு இருக்கும் பொதுமக்கள் வேலைதேடி வெளியூர்களுக்கு செல்லும் நிலை ஏற்படும் என்று அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.


Next Story