சபரிமலைக்கு காரில் செல்ல முயன்ற பொன். ராதாகிருஷ்ணனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


சபரிமலைக்கு காரில் செல்ல முயன்ற பொன். ராதாகிருஷ்ணனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 11:30 PM GMT (Updated: 22 Nov 2018 12:16 AM GMT)

சபரிமலைக்கு காரில் செல்ல முயன்ற பொன் ராதாகிருஷ்ணனை நிலக்கல் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சில் சென்று அய்யப்பனை தரிசனம் செய்தார்.

சபரிமலை,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

எனவே சபரிமலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றனர். குறிப்பாக நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு சபரிமலையில் போலீசார் மேற்கொண்டுவரும் கெடுபிடிகளால் பக்தர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் நாகர்கோவில் புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு காரில் புறப்பட்டார். அவர் நிலக்கல் பகுதியை அடைந்த போது அவரது காருடன் மேலும் சில வாகனங்களும் வந்தன.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு யதீர் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் வந்திருந்த அரசு வாகனத்தை மட்டும் பம்பை செல்ல அனுமதித்தார். இதற்கு பொன் ராதா கிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

உடனே பொன் ராதாகிருஷ்ணனிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கூறுகையில், ‘பம்பை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலத்த சேதம் ஏற்பட்டது. எனவே அங்கு வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லை. மீறி வாகனங்களை அனுமதித்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதாலேயே தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசாரின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனும் தனது அரசு வாகனத்தை துறந்து விட்டு கேரள அரசு பஸ்சில் ஏறி பம்பைக்கு சென்றார். அவருடன் பா.ஜனதா தொண்டர்களும் சென்றனர்.

பின்னர் பம்பையில் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், போலீசாரின் நடவடிக்கைகளை கடுமையாக குறை கூறினார். அவர் கூறுகையில், ‘சபரிமலையில் போலீசாரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. சபரிமலை விவகாரத்தில் அரசு தன்னைத்தானே திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் மக்கள் திருத்துவர். சபரிமலைக்கு வரும் வாகனங்களை கடந்த சீசனை போன்று பம்பை வரை அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு சென்றார். அங்கு சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை சென்ற மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story