தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது
x
தினத்தந்தி 22 Nov 2018 8:01 AM GMT (Updated: 22 Nov 2018 8:01 AM GMT)

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை 17 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.

சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: -

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதிகளில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகமாக சோழவரம், மாதவரத்தில் தலா 12 செ.மீ., வானூர், ரெட்ஹில்சில் 11 செ. மீ., பொன்னேரியில் 10 செ.மீ., நுங்கம்பாக்கம், மரக்காணம்,  திண்டிவனம், மீனம்பாக்கம், பண்ரூட்டியில் தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அடுத்து 24 மணி நேரத்தில், வட மாவட்டங்களில் பரவலாகவும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு, சில முறை மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் கிடையாது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 1 முதல் தற்போது வரை 26 செ.மீ., பதிவாகியுள்ளது. இயல்பு அளவு 32 சதவீதம். இதனால் 17 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.சென்னையில் இதுவரை பெய்த மழை அளவு 31 சதவீதம். இயல்பான அளவு 66 சதவீதம். 45 சதவீதம் குறைவான மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story