வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: நெல்லை, தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2018 12:09 AM GMT (Updated: 24 Nov 2018 12:09 AM GMT)

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தின் உள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தலைநகர் சென்னையில் கடந்த 21 மற்றும் 22-ந் தேதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது.

நேற்று காலையிலேயே சென்னையில் சூரியன் தலைக்காட்டத்தொடங்கியது. பிற்பகல் வரை பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் உள் பகுதிகளில் நேற்று (நேற்று முன்தினம்) நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது. தற்போது குமரிக்கடல் முதல் தமிழகத்தின் உள் பகுதிகள் வரை வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 24-ந் தேதி (இன்று) முதல் 26-ந் தேதி வரையிலான 3 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழையின் அளவு குறையும். கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை சென்னையில் 32 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆனால் 57 செ.மீ. மழை இயல்பாக பெய்யவேண்டும். இது இயல்பை விடவும் 44 சதவீதம் குறைவு ஆகும்.

இதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் 28 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால் 33 செ.மீ. மழை இயல்பாக பதிவாகவேண்டும். இது இயல்பை விடவும் 13 சதவீதம் குறைவு ஆகும். தற்போதைய வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி புயல் எதுவும் உருவாக வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி செங்கல்பட்டில் அதிகபட்சமாக 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுராந்தகத்தில் 14 செ.மீ. மழையும், மாமல்லபுரத்தில் 10 செ.மீ. மழையும், உத்திரமேரூர், வந்தவாசியில் தலா 9 செ.மீ. மழையும், மரக்காணம், பரங்கிப்பேட்டை, வானூர், செஞ்சி, திண்டிவனத்தில் தலா 8 செ.மீ. மழையும், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஆரணியில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இதேபோல அவினாசி, போளூர், கடலூர், சோழவரம், செங்குன்றத்தில் தலா 6 செ.மீ. மழையும், நெய்வேலி, திருவண்ணாமலை, தாம்பரம், சீர்காழி, மணிமுத்தாறு, வேலூரில் தலா 5 செ.மீ. மழையும், தரங்கம்பாடி, அரியலூர், அரக்கோணத்தில் தலா 4 செ.மீ. மழையும், நன்னிலம், புழல், பொன்னேரி, உளுந்தூர்பேட்டை, காரைக்கால், கோத்தகிரி, செங்கம், ஆம்பூரில் தலா 3 செ.மீ. மழையும், கள்ளக்குறிச்சி, உத்தமபாளையம், ஊட்டியில் தலா 2 செ.மீ. மழையும், திருப்பத்தூர், பாபநாசம், அதிராம்பட்டினம், பீளமேடு, திருக்கோவிலூர், அம்பாசமுத்திரத்தில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Next Story