பிப்ரவரி 7-ந்தேதிக்குள் திருவாரூரில் தேர்தல் நடத்தப்படும் மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணையம் தகவல்


பிப்ரவரி 7-ந்தேதிக்குள் திருவாரூரில் தேர்தல் நடத்தப்படும் மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 26 Nov 2018 7:34 AM GMT (Updated: 26 Nov 2018 7:34 AM GMT)

திருவாரூரில் பிப்ரவரி 7-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணைய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகிய 2 பேரும் மரணம் அடைந்ததால், அந்த 2 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளன.

தேர்தல் விதிகளின்படி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த நேரத்தில், பருவமழை காரணமாக இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் இல்லை.

ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனதற்கு எதிராக, டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. இறந்துவிட்டார்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தினால், தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இதனால் இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. எனவே தேர்தல் விதிகளின்படி உடனடியாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? அந்த தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும்? என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 26-ந்தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.

அதன்படி இன்று  விசாரணை தொடங்கியது. அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் திருவாரூரில் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும். திருப்பரங்குன்றம் வழக்கு சென்னை ஐகோர்ட்டில்  நிலுவையில் உள்ளதால் அது குறித்து முடிவு எடுக்கமுடியாது.  வழக்கின் தீர்ப்பை பொருத்தே  திருப்பரங்குன்றம் தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

Next Story