புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக நாகை வந்தார் முதல் அமைச்சர் பழனிசாமி


புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக  நாகை வந்தார் முதல் அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 28 Nov 2018 1:11 AM GMT (Updated: 28 Nov 2018 1:33 AM GMT)

புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதல் அமைச்சர் பழனிசாமி காரைக்கால் விரைவு ரயில் மூலமாக நாகை வந்து சேர்ந்தார்.

நாகை, 

கஜா’ புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், பயிர்கள் நாசமாகியுள்ளதால் விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் சேதமடைந்துள்ளதால் பலர் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர். சில கிராமங்களில் இன்னும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்று புயல் சேத பகுதிகளை பார்வையிட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதற்கிடையே ரத்து செய்யப்பட்ட புயல் சேத பகுதிகளை பார்வையிடும் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் மீண்டும் வகுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்படி எடப்பாடி பழனிசாமி நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரயில் மூலமாக நாகைக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார். 

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூரில்  இன்று  ஆய்வுப் பணிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்கிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதுடன், பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும், நிதியுதவிகளையும் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து, திருவாரூரிலும் கஜா புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர், திருவாரூரில் இருந்து புதன்கிழமை இரவு ரயில் மூலமாக சென்னை திரும்புகிறார்.

Next Story