காவிரி பிரச்சினையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வேதனை


காவிரி பிரச்சினையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வேதனை
x
தினத்தந்தி 6 Dec 2018 11:30 PM GMT (Updated: 6 Dec 2018 7:54 PM GMT)

காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வேதனை அளிக்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதனையுடன் கூறினார்.

சென்னை,

மேகதாதுவில் புதிய அணைகட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள குழுமம் அளித்த அனுமதியை திரும்ப பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி நேற்று நடந்த சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் அரசினர் தனித் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில் எதிர்கட்சியினர் கூறிய கருத்துக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள், காவிரி நதிநீரில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை தெளிவாக்குகின்றன. கீழ் பாசன மாநிலம் என்பதால் தமிழ்நாட்டிற்கு அதிக உரிமை உள்ளது.

டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், தமிழ்நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி விளங்குகிறது.

பிள்ளையும், தொட்டிலும்

மத்திய நீர்வள குழுமத்தின் தலைவராகவும், தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வகிப்பவரும் ஒருவரே. இவர் தலைமையில் இயங்கும் மத்திய நீர்வள குழுமம், தமிழ்நாடு தெரிவித்த மறுப்புகளையெல்லாம் பொருட்படுத்தாமல், மேகதாதுவில் புதிய அணைகட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசிற்கு அனுமதி வழங்கியது.

அனுமதி வழங்கிய அதே வேளையில், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி எந்தவித அனுமதியும் வழங்க மாட்டோம் என்று ஊடகங்களில் செய்தி வெளியிடும் மத்திய நீர்வள குழுமத்தின் தலைவரது செயல், பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் செயலாக உள்ளது.

கண்டிக்கத்தக்கது

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சமநிலையில் வைத்துப் பார்க்க வேண்டிய மத்திய அரசு, காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை பலமுறை எடுத்துரைத்தும் அதை கருத்தில் கொள்ளாமல் ஒருதலைபட்சமாக செயல்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஏற்கனவே, உச்சநீதிமன்றம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவை உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்காக 14.75 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகாவிற்கு கூடுதலாக அளித்து உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை கணக்கிட்டு ஏற்கனவே காவிரியில் தண்ணீர் பெற்ற பின்னர், மீண்டும் பெங்களூருவின் குடிநீர் தேவைக்கென 67 டி.எம்.சி. அடி நீர் கொள்ளளவு கொண்ட மேகதாதுஅணையை கட்ட கர்நாடகம் முயற்சிப்பது, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகும். இதற்கு துணைபோகும் மத்திய நீர்வள குழுமத்தின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

காங்கிரஸ் தரவில்லை

பெங்களூருக்கு குடிநீர் வழங்குதல் என்ற போர்வையில் கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினால் நீர் தேக்கும் கொள்ளளவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அம்மாநிலத்தின் பாசன பரப்பும் விரிவுபடுத்தப்படும். எனவே, இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரமும், உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும்.

மேலும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில், கடந்த காலங்களைப் போலவே காவிரி நீரை முழுமையாக தனது உபயோகத்திற்காகவே கர்நாடகம் பயன்படுத்தும் நிலை உருவாகும்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி, பிப்ரவரியில் வறட்சி ஏற்பட்டபோது உடனடியாக காவிரியில் 3 டி.எம்.சி. அடி நீரை திறந்துவிட கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டேன். கர்நாடக முதல்-மந்திரியை நான் நேரில் சந்திப்பதற்கு நேரம் கேட்கப்பட்டது. ஆனால், அவர்கள் சந்திக்க நேரமும் ஒதுக்கவில்லை, நீரையும் தரவில்லை.

குடிப்பதற்கு 3 டி.எம்.சி. தண்ணீர் கேட்டோம். அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிதான் கர்நாடகத்தில் இருந்தது. அதைக்கூட தர மறுத்தது காங்கிரஸ் கட்சிதான்.

வழக்கு தாக்கல்

மேகதாது அணை கட்டப்படும் இடத்தில் கர்நாடக நீர்வளத்துறை மந்திரி அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வது, தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை தூண்டிவிடும் விதமாக உள்ளது. மேகதாது விஷயத்தில் உரிய அறிவுரையை மத்திய நீர்வள குழுமத்திற்கு வழங்க 27.11.2018 பிரதமர் மற்றும் மத்திய நீர்வள ஆதாரத் துறை மந்திரிக்கு கடிதங்கள் மூலம் மீண்டும் வலியுறுத்தினேன்.

அதோடு, கர்நாடகத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் 30.11.2018 அன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3.12.2018 அன்று நடைபெற்ற காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாட்டின் பிரதிநிதிகள், கர்நாடகம் புதிய அணை கட்டுவதற்கான எந்த ஒரு அனுமதியும் மத்திய அரசு வழங்கக்கூடாது என்றும் உறுதிபட எடுத்துரைத்தனர்.

அதோடு, விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்கிய மத்திய நீர்வள குழுமத்தின் தலைவர், கர்நாடக நீர் வளத்துறை மந்திரி மற்றும் கர்நாடக உயர் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 5.12.2018 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story