திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் -தேர்தல் ஆணையம்


திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் -தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 4 Jan 2019 3:19 PM GMT (Updated: 4 Jan 2019 3:43 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி காலமானார். இதையடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. காலியாக உள்ள தொகுதிகளுக்கு 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும். இந்தநிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணப் பணிகள் முழுமையடையாத நிலையில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

பொதுமக்களும் போராட்டத்தை மேற்கொண்டனர். இடைத்தேர்தலையொட்டி திருவாரூரில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. திருவாரூரில் இன்னும் புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மக்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை.  இந்த சூழ்நிலையில் தேர்தல் நடைபெற்றால் அரசு நிர்வாகம் தேர்தலில்தான் கவனம் செலுத்தும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இதை கருத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. 

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை என ஐகோர்ட்டு கூறியது. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்க கூடாது, தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story