90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 2 லட்சம் வழக்குகள் முடித்துவைப்பு ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்


90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 2 லட்சம் வழக்குகள் முடித்துவைப்பு ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 4 Jan 2019 10:30 PM GMT (Updated: 4 Jan 2019 9:39 PM GMT)

கடந்த 6 ஆண்டுகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 2.15 லட்சம் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பணியின்போது காயமடைந்து இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.3.94 லட்சம் இழப்பீடு வழங்க திருப்பூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். அப்போது, மரணமடைந்த தொழிலாளிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக தனியார் ஆஸ்பத்திரி மீதான புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறித்து நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த வழக்கு விவரத்தை தாக்கல் செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அப்போது பதில் அளித்த அரசு வக்கீல், ‘90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று 87 வழக்குகளை அவினாசி குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முடித்துவைத்து உத்தரவிட்டார். அதில் இந்த வழக்கும் ஒன்று’ என கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இதுபோல 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் எத்தனை வழக்குகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முடித்துவைக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பனுக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 901 வழக்குகள் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்துக்காக முடித்துவைக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தான் அதிக வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 28,573 வழக்குகளும், அடுத்ததாக மதுரையில் 26,351 வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதி எம்.வி.முரளிதரன் அதிர்ச்சியடைந்து, போலீசாரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். வழக்குகளை பதிவு செய்யும் போலீசார் சட்டப்படி விசாரணை நடத்தாமல் அமைதியாக இருப்பதாலும், குற்றவாளிகளுடன் கூட்டுசேர்ந்து செயல்படுவதாலும் தான் இப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டுள்ளது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும், 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது என்றால், கடந்த 18 ஆண்டுகளில் முடித்துவைக்கப்பட்ட வழக்குகளின் புள்ளிவிவரங்களை கேட்டால், கண்டிப்பாக 10 லட்சத்தை தாண்டும். இதுபோன்ற நிலையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்று கோர்ட்டில் ஆஜராகியிருந்த தலைமை குற்றவியல் அரசு வக்கீல் ஏ.நடராஜனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தலைமை குற்றவியல் அரசு வக்கீல், ‘இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் வழக்குகளை முடித்துவைப்பதற்கு முன்பு மாஜிஸ்திரேட்டுகள் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கவேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் போலீசாரின் பணிப்பளு அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் புலன்விசாரணை பிரிவு என்ற தனிப்பிரிவு உருவாக்கினால் இதுபோன்ற செயலை தடுக்கலாம்’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். அவர்கள், இத்தனை வழக்குகள் முடிவுக்கு வந்தது குறித்தும், இதற்கு காரணமான விசாரணை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்பது குறித்தும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Next Story