முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் அமைச்சர்கள் உல்லாச பயணம்; மு.க. ஸ்டாலின்


முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் அமைச்சர்கள் உல்லாச பயணம்; மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 24 Jan 2019 3:58 PM GMT (Updated: 24 Jan 2019 3:58 PM GMT)

முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் அமைச்சர்கள் உல்லாச பயணம் மேற்கொள்கின்றனர் என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.  இந்த மாநாட்டில் முதல் நாளில் பங்கேற்ற பல்வேறு நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தாங்கள் முதலீடு செய்ய விரும்பும் துறைகளுக்கான கருத்தரங்குகளில் பங்கேற்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நடந்த கருத்தரங்கில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாய்ப்புகள், உணவுத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது.

300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு கையெழுத்தானதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், முதல் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதத்தைக்கூட அரசால் நிறைவேற்ற முடியவில்லை.

2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு ‘மாயமான் காட்சி’ என்பது மட்டுமே உண்மை.  விளம்பரம் செய்து அரசின் பணத்தை வீணடித்தது தான் மாநாட்டின் முக்கிய சாதனை.

304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முழு விவரங்களும் வெளிவந்தால் தான் உண்மை நிலவரம் தெரியும்.  முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள் உல்லாச பயணம் மேற்கொள்கின்றனர்.

அந்நிய முதலீடுகள் குறைந்து, முதல் 10 இடங்களுக்குள் தமிழகம் வர முடியவில்லை.  நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79% மட்டுமே என அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story