எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய பின் தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி


எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய பின் தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 Jan 2019 7:18 AM GMT (Updated: 27 Jan 2019 8:53 AM GMT)

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி தமிழில் உரையை தொடங்கி பேசினார்.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் வழியே மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இதேபோன்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களான முரளிதரராவ், எச். ராஜா, இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

இதன்பின், மதுரை மண்டேலா நகரில் அடிக்கல் நாட்டும் மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி சால்வை அணிவித்து மரியாதை தெரிவித்ததுடன், மீனாட்சி அம்மன் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.  இதனுடன், மதுரை, நெல்லை மற்றும் தஞ்சை மருத்துவமனைகளில் பன்னோக்கு மருத்துவ பிரிவையும் திறந்து வைத்துள்ளார்.  12 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையத்தினையும் தொடங்கி வைத்துள்ளார்.  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பன்னோக்கு உயர் சிகிச்சை மைய கட்டிடத்தினையும் திறந்து வைத்துள்ளார்.

இதன்பின்னர் பிரதமர் மோடி, அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று கூறி தமிழில் உரையை தொடங்கினார்.  அவர் பேசும்பொழுது, நாட்டின் 4 திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தனது சேவை வழியே தனி இடத்தினை பெற்றுள்ளது.

மதுரை, நெல்லை மற்றும் தஞ்சையில் பன்னோக்கு மருத்துவ பிரிவுகள், உயர் சிகிச்சை மையங்களை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  இதனால் கன்னியாகுமரியை சேர்ந்தவர்களும் பயனடைவர் என கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் 30% மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.  பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.5 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.  இது உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்.  தமிழகத்தில் 1,320 சுகாதார நிலையங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளன என கூறினார்.  இதன்பின்பு அவர் நன்றி, வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை முடித்துள்ளார்.

இந்த விழாவை தொடர்ந்து, அதே மைதானத்தில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு மேடைக்கு நரேந்திர மோடி சென்று, பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.  பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story