தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் இன்று இல்லை; பள்ளி கல்வித்துறை திடீர் முடிவு


தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் இன்று இல்லை; பள்ளி கல்வித்துறை திடீர் முடிவு
x
தினத்தந்தி 28 Jan 2019 5:47 AM GMT (Updated: 28 Jan 2019 5:47 AM GMT)

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் இன்று இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

சென்னை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பணிகள், கல்வி பணிகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டது.

அடக்கு முறை, எச்சரிக்கையால் போராட்டத்தை நசுக்கிவிடமுடியாது என்றும், நாளுக்கு, நாள் போராட்டம் தீவிரமடையும் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் அதனை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  இந்த கெடு இன்றுடன் முடிவடைகிறது.  ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் அறிவித்து உள்ளனர்.

அதன்படி பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போலீசார் சில இடங்களில் கைது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.  ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்பி வராத நிலையில் அந்த இடங்களை நிரப்ப தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என கூறப்பட்டது.  இதனை தொடர்ந்து அதற்காக விண்ணப்பிப்பதற்கு பலர் வரிசையில் காத்து நின்றனர்.

இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் இன்று இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்கள் திரும்பி வருவதற்காக இன்று மாலை வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதனையும் மீறி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி வராவிட்டால் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story