குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7, 324 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஐகோர்ட்டில், டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்


குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத  7, 324 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஐகோர்ட்டில், டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 5 Feb 2019 11:45 PM GMT (Updated: 5 Feb 2019 9:08 PM GMT)

குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத 7 ஆயிரத்து 324 போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டில் தமிழக டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

இதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, குற்றவாளிகளுடன் கைகோர்த்து கொண்டு போலீசார் செயல்படுவதால், உரிய காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று கூறினார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து உள்துறைச்செயலாளர், தமிழக டி.ஜி.பி. விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டி.ஜி.பி. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு வழக்கின் குற்றப்பத்திரிகையை குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்வது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்க இந்த ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஒரு குற்ற வழக்கு பதிவான நாளில் இருந்து உரிய காலத்துக்குள் குற்றப்பத்திரிகையை விசாரணை அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், பல லட்சம் வழக்குகளை குற்றவியல் கோர்ட்டு முடித்து வைத்துள்ளது. இதற்கு காரணமான 7 ஆயிரத்து 324 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக, அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை சுமார் 1 லட்சத்து 72 ஆயிரத்து 603 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கே எடுத்துக்கொள்ளப்படாமல் உள்ளது. இந்த சிக்கலை தீர்க்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் இறுதி தேதியை குறிப்பிடுவதற்கு ஏதுவாக கீழமை விசாரணை நீதிமன்றங்களில் தனி பதிவேடுகளை நீதித்துறை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி எம்.வி.முரளிதரன் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

Next Story