தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் தமிழக சட்ட மசோதா தாக்கல்


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் தமிழக சட்ட மசோதா தாக்கல்
x
தினத்தந்தி 13 Feb 2019 9:00 PM GMT (Updated: 13 Feb 2019 7:37 PM GMT)

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை, 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1–ந்தேதி முதல் குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110–விதியின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 5–ந்தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் ஜனவரி 1–ந்தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். இந்த சட்டத்தை செயல்படுத்தும் வகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பவர்கள் மீது அபராதம் விதிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அபராதம் எவ்வளவு?

அதன்படி, தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளித்தல் ஆகிய குற்றங்களுக்காக வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2–வது முறை தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகளுக்கு முதல் முறை ரூ.10 ஆயிரம், இரண்டாவது முறை ரூ.15 ஆயிரம், 3–வது முறை 25 ஆயிரம் எனவும், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு முதல் முறை ஆயிரம் ரூபாய், 2–வது முறை 2 ஆயிரம் ரூபாய், 3–வது முறை ரூ.5 ஆயிரம், சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு முதல் முறை ரூ.100, இரண்டாவது முறை ரூ.200, 3–வது முறை 500 அபராதமாக வசூலிக்கப்பட இருக்கிறது. 3 முறைக்கு பிறகும் தவறு செய்தால் வணிக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story