பா.ம.க. மாநில துணை தலைவரான நடிகர் ரஞ்சித் கட்சியில் இருந்து விலகல்


பா.ம.க. மாநில துணை தலைவரான நடிகர் ரஞ்சித் கட்சியில் இருந்து விலகல்
x
தினத்தந்தி 26 Feb 2019 1:26 PM GMT (Updated: 26 Feb 2019 1:26 PM GMT)

பா.ம.க. மாநில துணைத்தலைவரும், நடிகருமான ரஞ்சித் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

கோவை,

தமிழ் திரைப்படங்களில் நாயகன், வில்லன் என பல்வேறு வேடங்களை ஏற்று நடித்தவர் நடிகர் ரஞ்சித்.  இவர் பா.ம.க. மாநில துணை தலைவராக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அக்கட்சியில் இருந்து அவர் விலகியுள்ளார்.  இதுபற்றி அவர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்பொழுது, கடந்த வாரம் வரை முதல் அமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கூட்டணி தொடர்பாக பா.ம.க. தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள்.  கூட்டணி தொடர்பாக எந்த தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது? தொண்டர்களை சந்தித்துதான் கூட்டணி அமைக்கப்பட்டது என அன்புமணி கூறியது சிரிப்புதான் வருகிறது.

4 பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது.  அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை கூறிவிட்டு எப்படி அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்கலாம்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுவுக்கு எதிராக போராடிவிட்டு மதுக்கடைகளை நடத்துவோரிடம் கூட்டணி வைப்பது என்பது ஏற்க கூடியதல்ல.  இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பா.ம.க. ஏமாற்றி விட்டது என அவர் கூறியுள்ளார்.

Next Story