ஐ.நா. சபையில் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஐ.நா. சபையில் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Feb 2019 10:26 PM GMT (Updated: 26 Feb 2019 10:26 PM GMT)

“இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த தமிழினத்துக்கு எதிரான போரில் 1½ லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை படுகொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று பா.ம.க. உள்பட கட்சிகளும், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இலங்கை போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு கடந்த 2014-ம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது. விசாரணையில், போர்க்குற்றங்கள் நடந்தது உறுதியானது.

இந்தநிலையில் இலங்கை போர்க்குற்றம் குறித்த நீதிமன்ற விசாரணைக்கு காலவரையறை நிர்ணயிக்கக் கோரும் தீர்மானத்தை ஜெனிவாவில் நேற்று முன்தினம் தொடங்கிய ஐ.நா. மனித உரிமை பேரவையின் 40-வது கூட்டத்தில் கொண்டு வர இங்கிலாந்து, கனடா, மாசடோனியா, ஜெர்மனி, மாண்டநெக்ரோ ஆகிய 5 நாடுகள் கூட்டாக அறிவித்திருக்கின்றன. அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் இந்த நாடுகளால் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.

இந்தநிலையில், “பன்னாட்டு நீதிபதிகளை கொண்டு போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரும் ஐ.நா. மனித உரிமை பேரவை தீர்மானத்திலிருந்து வெளியேற இலங்கை முடிவு செய்துள்ளது” என அந்நாட்டு அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

இலங்கை அரசின் இந்த சதியை முறியடிக்க வேண்டும் என்றால், இலங்கைக்கு எதிரான மனித உரிமை பேரவையில் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story