அ.தி.மு.க.வில் ஜென்மத்திலும் இணைய முடியாது: டி.டி.வி.தினகரன் கூவத்தில் குதிக்கட்டும் அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்


அ.தி.மு.க.வில் ஜென்மத்திலும் இணைய முடியாது: டி.டி.வி.தினகரன் கூவத்தில் குதிக்கட்டும் அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்
x
தினத்தந்தி 25 March 2019 10:33 PM GMT (Updated: 25 March 2019 10:33 PM GMT)

டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வில் ஜென்மத்திலும் இணைய முடியாது என்றும், அவர் கூவத்தில் குதிக்கட்டும் என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் குழப்பத்தின் உச்சியில் இருந்து கொண்டு இருக்கிறார். அவர் தங்கள் கட்சி தலைவரான, அவரது தந்தையை பற்றி கூறாமல் எங்கு பேசினாலும் எங்கள் அம்மாவை (ஜெயலலிதாவை) பற்றியே பேசுகிறார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிக்கப்படுவார்கள் என்று பேசுகிறார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை கமிஷன் அறிக்கை அளிக்கப்படும்போது, அம்மாவின் மரணத்துக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பது தான் அரசு மற்றும் அ.தி.மு.க.வின் ஒரே நோக்கமாகும். தமிழக மக்களின் எண்ணமும் அதுதான்.

ஆனால், மு.க.ஸ்டாலின் இப்போது அம்மா, அம்மா என்று கூறிக்கொண்டு, அப்பாவையும் (கருணாநிதி), அண்ணாவையும் மறந்து விட்டார். ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று அம்மா என்ற ஆயுதத்தை எடுத்து இருக்கிறார். இது சந்தர்ப்பவாதம்.

எங்கள் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவின் பெயரை உச்சரிப்பதற்கு எங்களுக்கு முழு உரிமையும் உண்டு. மு.க.ஸ்டாலின் கூறுவது போல் சொல்வது என்றால், சூடு, சொரணை, மானம், ரோஷம் இருந்தால் அவர்கள் கட்சியின் கொள்கைகளை சொல்லி ஓட்டு கேட்கலாம். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் அளவுக்கு அந்த கட்சியின் நிலைமை மாறியிருப்பது உண்மையில் வருத்தமாக உள்ளது.

அ.ம.மு.க.வில் ஆள் இல்லாததால் 3-வது கட்டமாக ஆட்களை தேடி, தேடிப்பார்த்து வேட்பாளர் பட்டியல் போடுகிறார். பெங்களூரில் இருந்து ஓசூர் வேட்பாளரை நிறுத்துகிறார். இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு விற்காது. உள்நாட்டு சரக்கு தான் அமோகமாக விற்கும்.

டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வில் இணைவது என்பது ஜென்மத்திலும் நடக்காத விஷயம். புனிதமாக இருக்கும் அ.தி.மு.க. கடலில் டி.டி.வி.தினகரன் குதிக்க வேண்டாம். அவர் கூவத்திலேயே குதிக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story