விபத்தில் படுகாயம் அடைபவர்களின் உயிரை காக்கும் அவசர சிகிச்சை அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


விபத்தில் படுகாயம் அடைபவர்களின் உயிரை காக்கும் அவசர சிகிச்சை அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 11 Jun 2019 10:44 PM GMT (Updated: 11 Jun 2019 10:44 PM GMT)

விபத்தில் படுகாயம் அடைபவர்களை 48 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளிப்பது குறித்து புதிய திட்டம் கொண்டுவரப்படுமா? என்று ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

விபத்தில் பலியான ஒருவரது வாரிசுகள், 3 கோர்ட்டுகளில் பல லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு 3 வழக்குகளை தாக்கல் செய்தனர். இதுகுறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், இந்த மோசடியில் பல வக்கீல்களுக்கு தொடர்பு உள்ளதால், இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த மோசடி குறித்து விசாரணை நடத்திய நிபுணர் குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. அதில், மோசடியில் ஈடுபட்டுள்ள வக்கீல்களின் விவரங்களை குறிப்பிட்டு இருந்தது.

மேலும், இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தனியாக ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வக்கீல் தொழில் என்பது புனிதமான தொழிலாகும். அதை கருத்தில் கொண்டு நீதித்துறைக்கு உதவும் வகையில் வக்கீல்களின் செயல் பாடுகள் இருக்க வேண்டும். இந்த தொழிலில் கறைபடிந்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மைதரும் வகையில் வக்கீல்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். ஆனால், போலி விபத்து வழக்கில், 7 வக்கீல்கள் மீது நேரடியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கூறியுள்ளது.

மேலும், வாகன விபத்தில் படுகாயம் அடைபவர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளித்தால் பலர் உயிர் பிழைத்து விடுவார்கள். இதற்கு அரசு தரப்பில் அவசர சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம் ஏதேனும் கொண்டுவரப்படுமா? என்பது குறித்து உள்துறை, நிதி, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளின் செயலாளர்கள், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். வழக்கை வருகிற ஆகஸ்டு 1-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story