எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. போன்ற படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு தொடங்கியது தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடந்தது


எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. போன்ற படிப்புகளுக்கான  ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு தொடங்கியது  தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடந்தது
x
தினத்தந்தி 22 Jun 2019 10:00 PM GMT (Updated: 22 Jun 2019 9:35 PM GMT)

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. போன்ற படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 39 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

சென்னை,

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவில்லை என்றும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்துகிறது என்றும் தகவல் வெளியாகின. பின்னர், அதை கைவிட்டு மீண்டும் ‘டான்செட்’ தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்ற அறிவிப்பு வெளியானது.

அதன்படி, ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் மொத்தம் 39 மையங்களில் இந்த நுழைவுத்தேர்வு நடைபெற்றது.

முதல் நாளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை எம்.சி.ஏ. படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை எம்.பி.ஏ. படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இந்த தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூலை) 2-வது வாரத்துக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்பட்டு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்று தகவல்கள்வெளியாகியுள்ளன.

Next Story