அரசு அறிவித்தபடி தமிழகத்தில் ‘மருத்துவமனை தினம்’ இன்று கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு


அரசு அறிவித்தபடி தமிழகத்தில் ‘மருத்துவமனை தினம்’ இன்று கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 29 July 2019 8:12 PM GMT (Updated: 29 July 2019 8:12 PM GMT)

அரசு அறிவித்தபடி தமிழகத்தில் இன்று ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படுகிறது. சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி நாராயணசாமி-சந்திரம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகளாக பிறந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் முதல் பெண் டாக்டரான இவரது பிறந்த நாள், மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கடந்த 16-ந்தேதி சட்டசபையில் அறிவித்தார்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முதல் முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவமனை தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த தினத்தை கொண்டாடுவதற்கு அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் மருத்துவமனைகளில் செயல்பாடுகள், சாதனைகள், மற்றும் சிறப்புகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட உள்ளது.

மேலும் மருத்துவமனையின் சாதனைகள் மற்றும் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து இன்று சிறப்பு கண்காட்சியும், மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பயனாளிகள் தெரிவிக்கவும், மருத்துவமனை ஊழியர்கள் தங்களது பணிகள் குறித்து தெரிவிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு உதவும் சமூக அமைப்புகளை பாராட்டவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளான ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளின் சாதனை குறித்த விளக்க கண்காட்சி அந்தந்த மருத்துவமனைகளில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த துறை மருத்துவர்கள் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தவும் மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Next Story