நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடரும் எடப்பாடி பழனிசாமி பேட்டி


நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடரும் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 29 Sep 2019 11:30 PM GMT (Updated: 29 Sep 2019 10:15 PM GMT)

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நானே நேரிடையாக சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று அந்த மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக நாங்கள் இப்போது செயலாற்றி கொண்டிருக்கிறோம். மேட்டூர் அணையில் தற்போது தொடர்ந்து 120 அடியில் தண்ணீர் இருக்கிறது. பாசனத்திற்கு தேவையான நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ் பாடம் நீக்கப்பட்டது தொடர்பாக கருத்து ஏதும் சொல்ல முடியாது. அதாவது, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு ஆகும். அதில் தமிழக அரசு தலையிடாது. ஆகவே அரசு தலையிட்டால் வேண்டுமென்றே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அரசு தலையிடுகிறது என்று சொல்வார்கள். தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது.

கீழடி ஆராய்ச்சி ஆய்வுக்கு 1,2,3 கட்டங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு 4 மற்றும் 5-வது கட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றால் அங்கு முதல்- அமைச்சர் செல்ல வேண்டும் என்பது கிடையாது. அந்த துறை அமைச்சர் பாண்டிய ராஜன் சென்று பார்வையிட்டு வருகிறார். இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே கூட்டணி தொடரும் என்று கட்சி தலைவர்களே தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியை பொறுத்தவரைக்கும் தொடரும் என்று பல பேர் தெரிவித்துவிட்டார்கள். இப்போது பா.ஜனதா கட்சிக்கு மாநில தலைவர் யாரும் இல்லை. இதனால் அவர்களை சந்தித்து பேச வாய்ப்பு இல்லை. இது இடைத்தேர்தல் தான். இடைத்தேர்தலை பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க. போட்டியிடும் என்று எல்லா கூட்டணி கட்சிகளுக்கும் எங்களது விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்து உள்ளோம்.

நீட் தேர்வு முறைகேட்டை காவல்துறையினர் கண்டுபிடித்து வருகிறார்கள். நீட் தேர்வு என்பது மத்திய அரசால் நடத்தக்கூடிய தேர்வு ஆகும். இந்த தேர்வில் பல முறைகேடு நடந்திருப்பதாக அரசுக்கு தகவல் தெரிந்தவுடன் எங்கு எல்லாம் முறைகேடு நடந்திருக்கிறதோ? அதை கண்டுபிடித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடு நடைபெறாமல் நீட் தேர்வு நடப்பதற்கு அரசு விழிப்புபோடு செயல்படும்.

கரூர் மாயனூர் அணை முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது கட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் அந்த அணைக்கு டெண்டர் விடப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் மாயனூர் அணை கட்டியதாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறுவது தவறு. தி.மு.க.வினர் பொய் சொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இப்போது கூட குடிமராமத்து திட்டத்தை அவர்கள் தான் கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறார்கள். எந்த திட்டத்தை கொண்டு வந்தனர்?. தி.மு.க. ஆட்சியில் எந்த ஏரி, குளத்தை தூர்வாரினார்கள்?.

மேட்டூர் அணை கட்டி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது? சுமார் 83 ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளன. அத்தனையும் தூர்வார வேண்டும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஏரி, குளங்கள் தேர்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பணிகள் தி.மு.க. ஆட்சியில் செய்தார்களா? ஆனால் அவர்கள் குறைகளை மட்டுமே கூறுவார்கள்.

அதேபோல் தடுப்பணைகள் கட்டுவதற்கு தனியாக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக நதி மற்றும் ஓடையின் குறுக்கே ரூ.600 கோடியில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை நீர் மேலாண்மை திட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓய்வு பெற்ற பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் வேண்டும் என்றே குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் தான் நிறைய ஊழல் நடந்திருக்கிறது. என் மீது கூட ஊழல் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தடை ஆணை விதித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் வீராணம் ஊழல் நடந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் புதிய வீராணம் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதனால் சென்னை மாநகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story