நீட் தேர்வு முறைகேடு குறித்து 3 மருத்துவ கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை மேலும் ஒரு மாணவர் தந்தையுடன் கைது - பரபரப்பு தகவல்கள்


நீட் தேர்வு முறைகேடு குறித்து 3 மருத்துவ கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை மேலும் ஒரு மாணவர் தந்தையுடன் கைது - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 29 Sep 2019 11:45 PM GMT (Updated: 29 Sep 2019 10:14 PM GMT)

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு மாணவரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேடு குறித்து 3 மருத்துவ கல்லூரி முதல்வர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தேனி,

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யாவும், அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 26-ந் தேதி கைது செய்தனர். அவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

முன்னதாக அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், மேலும் சில மாணவர்கள் இதேபோல் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இருப்பதும், இதற்காக இடைத்தரகர்கள் மூலம் ஏராளமான பணம் கைமாறி இருப்பதும் தெரியவந்தது.

வெங்கடேசன் சி.பி.சி.ஐ.டி. போலீசில் அளித்த தகவலின் பேரில், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மாணவர் பிரவீண், பாலாஜி மருத்துவ கல்லூரி மாணவர் ராகுல், சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள ஸ்ரீசத்ய சாய் மருத்துவ கல்லூரி மாணவி அபிராமி ஆகிய 3 பேரும் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து, பிரவீண், அவருடைய தந்தை சரவணன், ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோர் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர்.

இதேபோல் மாணவி அபிராமி, அவருடைய தாயாருடன் அழைத்து வரப்பட்டார். மேலும், அபிராமியின் தந்தை மாதவனையும் போலீசார் பிடித்தனர். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவில் அவரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்ற காவலில் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து மாணவி அபிராமி, மாணவர் ராகுல் மற்றும் அவர்களுடைய தந்தையரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஸ்குமார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நேற்று பிற்பகல் 2 மணி வரை விசாரணை நீடித்தது.

அதன்பிறகு மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகிய இருவரையும் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் இருவரும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாணவி அபிராமி மற்றும் அவருடைய தந்தை மாதவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஸ்குமார் கூறுகையில், “மாணவி அபிராமி தொடர்பான ஆவணங் களை முழுமையாக ஆய்வு செய்ததில், சில சந்தேகங்கள் எழுந்து உள்ளன. அவர்கள் தரப்பிலும் சில ஆவணங் களை சமர்ப்பித்து உள்ளனர். ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படமும், அவரும் ஒன்றுபோல் இருப்பதாக தெரிகிறது. எனவே, இதன் உண்மைத்தன்மையை அறிய தடயஅறிவியல் சோதனை நடத்தப்பட இருக்கிறது“ என்றார்.

இதற்கிடையே தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள், நீட் தேர்வு தொடர்பான ஆவணங்களை கல்லூரி நிர்வாகத்தினர் ஆய்வு செய்த போது, முகமது இர்பான் என்ற மாணவர் மட்டும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு வரவில்லை. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த அவர் கல்லூரி விடுதியை காலி செய்துவிட்டு சென்றது தெரியவந்தது. ஆவணங்கள் சரிபார்ப்புக்கு ஆஜராகுமாறு கல்லூரி நிர்வாகம் பதிவு தபால் அனுப்பியும் அவர் வரவில்லை.

இதனால் மாணவர் முகமது இர்பானும் நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் முகமது இர்பானின் தந்தை ஷபியை நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாணியம்பாடியில் கைது செய்தனர். இவர் டாக்டர் ஆவார். பின்னர் விசாரணைக்காக ஷபி தேனி கொண்டு செல்லப்பட்டார். முகமது இர்பானின் சகோதரர்கள் 5 பேரும் டாக்டர்களாக உள்ளனர்.

இதேபோல் மாணவர் முகமது இர்பான் சேலத்தில் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைக்காக அவர் தேனிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, மாணவர் முகமது இர்பான் குறித்த விவரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டதாக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூ நேற்று தெரிவித்தார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்ந்து கைது சம்பவங்கள் நடைபெறுவதால், பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பாக தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேந்திரனிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதேபோல், மேலும் 3 கல்லூரி முதல்வர்களுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்பேரில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி முதல்வர் சுந்தரம், சென்னை பாலாஜி மருத்துவ கல்லூரி முதல்வர் சாய்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நேற்று காலை வரை நீடித்தது.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஸ்ரீசத்ய சாய் மருத்துவ கல்லூரி முதல்வர் பிரேம்நாத் பகிரய்யா அங்கு வந்தார். அவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மாலை வரை நடந்தது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “விசாரணையின் போது கல்லூரி முதல்வர்கள் பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளனர். மாணவர்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் பெறப்பட்டு உள்ளன. மாணவர் சேர்க்கை நடந்த அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என கேட்கப்பட்டு, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மாணவர் சேர்க்கையின் போதே இதை கண்காணிக்க தவறியது ஏன்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளனர். மேலும், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட உள்ளது“ என்றார்.

ஆள்மாறாட்டம் செய்வதற்கு ரசீத் என்ற இடைத்தரகர் மாணவர்களின் பெற்றோரிடம் பணம் பெற்றதாக தெரியவந்து உள்ளது. அந்த இடைத்தரகர் எங்கே உள்ளார்? என்று தெரியவில்லை. அவருடைய செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இடைத்தரகர் பிடிபட்டால் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன், இந்த மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் யார்? என்பதும் தெரியவரும்.

Next Story