தமிழ்மொழி பற்றி அமெரிக்க ஊடகங்கள் அதிகம் செய்தி வெளியிட்டு வருகின்றன; பிரதமர் மோடி


தமிழ்மொழி பற்றி அமெரிக்க ஊடகங்கள் அதிகம் செய்தி வெளியிட்டு வருகின்றன; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 30 Sep 2019 4:38 AM GMT (Updated: 30 Sep 2019 4:38 AM GMT)

தமிழ்மொழி பற்றி அமெரிக்க ஊடகங்கள் அதிக அளவில் செய்தி வெளியிட்டு வருகின்றன என சென்னை வந்திறங்கிய பிரதமர் மோடி கூறினார்.

சென்னை,

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று நடைபெற உள்ளது.

இந்த 2 நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்திறங்கினார்.  விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மந்திரிகள் பூங்கொத்துகள், ரோஜா பூ ஆகியவை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன்பின் பா.ஜ.க. தொண்டர்கள் முன் பிரதமர் மோடி பேசினார்.  அவர் பேசும்பொழுது, நாட்டின் பிரதமராக 2வது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்னை வந்துள்ளதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன்.  வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்பொழுது, தமிழ்மொழியின் தொன்மை குறித்து அமெரிக்காவில் மற்றும் ஐ.நா. பொது சபையில் பேசினேன்.

இந்தியாவை பற்றிய பெரும் எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களுக்கு உள்ளது.  அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர்கள் நலமுடன் உள்ளனர்.  தமிழ் மொழி குறித்து தான் தற்போது அமெரிக்க ஊடகங்கள் அதிக அளவில் செய்தி வெளியிட்டு வருகின்றன.

பிளாஸ்டிக்கையே பயன்படுத்த வேண்டாம் என்று நான் கூறவில்லை.  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்றே கூறினேன்.  காந்தியடிகளின் 150வது பிறந்த நாளில் பாதயாத்திரை செல்ல இருக்கிறோம் என்று கூறினார்.

Next Story